சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு தைப் பூசமான இன்று பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் அல்லது அந்த தினத்தையொட்டி உள்ள பூச நட்சத்திரத்தில் வருவது தைப்பூசம் ஆகும். எல்லா சிவன் கோயில்களிலும், ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பொங்கல் மற்றும் தைப்பூசத்தன்று கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்திருந்தது. இதனால் இன்றைய தினம் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூடப்பட்டன இருப்பினும் வழக்கம் போல் முருகனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் வெளியில் நின்றவாறு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக சேலம் ஜங்சன் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ காவடி பழனியாண்டவர் திருக்கோவில் தைப் பூசத்தை முன்னிட்டு 30 க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானைக்கு தங்க அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். முகக் கவசம் அணியாமல் வரும் நபர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 



சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊத்துமலை முருகன் கோயில், கந்தாஸ்ரமம் முருகன் கோயில், அடிவாரம் ஆறுபடை முருகன் கோயில், குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவில் மற்றும் பேலன்ஸ் முருகன் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்கள் மூடப்பட்டதால் கோயில் வெளியில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் மலேசியாவில் உள்ள 140 அடி உயரம் கொண்ட முருகன் சிலையை விட 6 அடி (146 அடி) அதிக உயரம் கொண்ட உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு தைப் பூசமான இன்று பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு தைப் பூசத்தின் போது முருகன் சிலை வடிவமைப்பு நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டிற்கும் மேலாக கால தாமதமாகி வருகிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.