தீபாவளி பண்டிகை வருகின்ற 12 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனிடையே பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் கேட்டு உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக திறந்தவெளியில் அனைத்து பட்டாசு கடைகளிலும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறி வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அனைத்து கடைகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டால் வியாபாரம் பாதிக்கும், மழைக்காலம் என்பதால் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து பட்டாசு கடைகளும் ஒரே இடத்தில் அமைக்கும்போது பெருமளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆங்காங்கே கடை உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடை நடத்தி வருகிறோம். அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இதுவரை தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. குறைந்தது பத்து நாட்களாவது கடை நடத்தினால் மட்டுமே போதிய வியாபாரம் நடைபெறும். ஆனால் இன்னும் எட்டு நாட்கள் கூட இல்லாத நிலையில் இதுவரை பட்டாசு கடை அமைப்பதற்கான எந்த வித அறிவிப்பையும் சேலம் மாவட்ட நிர்வாகம் வழங்கப்படவில்லை. பட்டாசு ஆர்டர் செய்து வாங்கிவிட்டதால் கடை வாடகை உட்பட அனைத்து பணிகளும் செய்துவிட்டோம், விதிமுறைகளை பின்பற்றியும் உரிமை கிடைக்காமல் கடை அமைக்க முடியாமல் உள்ளதால் அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், சேலம் மாவட்ட நிர்வாகம் புறநகர் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை ஒரே இடத்தில் வைப்பதற்கான மாவட்ட நிர்வாகம் பேசி வருகிறது. ஆனால் லட்சக்கணக்கில் பணத்தை இதற்காக முதலீடு செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் கூறுவது போல ஒரே இடத்தில் கடைகளை அமைத்தால் வியாபாரம் பெரிதளவில் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒரே இடத்தில் பட்டாசுகளை வைப்பதினால் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். பருவமளையும் தொடங்க உள்ளதால் பட்டாசுகளை பாதுகாப்பதற்கு ஊதிய வசதிகள் இல்லாமல் போய்விடும். எனவே தாங்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள எங்களது கடைகளுக்கு உடனடியாக சேலம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டனர்.