தருமபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் மற்றும் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்து கிலோ ரூ.30-லிருந்து ரூ.80-க்கு விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி பண்டிகைக்கு 150 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

 

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், மாரண்டஹள்ளி, பாலக்காடு, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் பாலக்கோடு, ஓசூர், நாமக்கல், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.



 

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயம் விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மாதங்களாக தருமபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை குறைந்து, 30 லிருந்து 40 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர். இந்நிலையில் தற்போது தருமபுரி, செட்டிக்கரை, குன்செட்டிஹள்ளி, சோலைக்கொட்டாய், சவுளூர், அதகப்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வரத்து மற்றும் விளைச்சல் குறைந்துள்ளதால், கடந்த 2 மாதத்திற்கு பிறகு, விலை உயர்ந்துள்ளது. இதனால் கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்பனையாகிறது. தொடர்ந்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கிலோ ரூ.60 வாங்கி, கடைகளில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. ஆனால் விவசாயிகளிடமிருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் அதிக லாபமடைந்து வருகின்றனர். அதனால் முதலீடு செய்து, கடினமாக உழைக்கும் விவசாயிக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை, சாலையோரம் வைத்து நேரடியாக கிலோ ரூ.80-க்கு  விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கிறது, வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு விலை குறைவாக கிடைக்கிறது. மேலும் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வருவதால், மேலும் விலை உயர்ந்து, கிலோ ரூ.150 வரை உயர வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விலை குறைவாக இருந்த நிலையில், தற்போது விலை உயர்ந்திருப்பதால், நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.