சேலம் மாவட்டம் ஆச்சாம்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரது மகன் கோகுல் (17) சேலம் அரசு தொழில் பயிற்சி கல்லூரியில் டர்னர் படிப்பில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று நிலையில் வருகின்ற ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாடுவதற்கு முன்னேற்பாடு பணிகள் அரசு கல்லூரி நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாணவர்களையே சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தியுள்ளனர். அப்போது கோகுல் கல்லூரியின் 20 அடி மேற்கூரையில் இருந்து இயந்திரங்கள் மீது விழுந்து தலையின் பின் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ்காக நீண்டநேரம் காத்திருந்தும் வராத நிலையில் மாணவர்களே இரு சக்கர வாகனத்தில் வைத்து படுகாயம் அடைந்த கோகுலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
தற்போது கோகுல் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவனின் தாயார் மற்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தனது மகனின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்வேன் என்று ஆசிரியர்களை பெற்றோர் எச்சரித்தனர். இது தொடர்பாக கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் கோகுலை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் வந்து சந்தித்து உடல் நலம் குறித்து மருத்துவரிடம் விசாரணை நடத்தினார். இதனிடையே மருத்துவமனை சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவரிடம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.
மாணவனின் தாய் மற்றும் உறவினர்கள் கூறுகையில், எனது மகனை ஆயுத பூஜை விழாவிற்காக தொழில் பயிற்சி கல்லூரியை சுத்தம் செய்வதற்காக பணியில் ஆழ்த்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனை ஆம்புலன்ஸ் வைத்து அழைத்து வராமல் சக மாணவர்களுடன் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்தனர். மேலும் அரசு மருத்துவமனைக்கு இதுவரை ஒரு ஆசிரியர் கூட வந்து பார்க்கவில்லை என குற்றம் சாட்டினர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி சகமாணவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஆயுத பூஜை பண்டிகையின் போது கல்லூரியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்வது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு ஆயுத பூஜை நெருங்கி வருவதால் கல்லூரியில் உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து கொண்டாட வேண்டும் என ஆசிரியர்கள் கூறினார். அதன் அடிப்படையில் இன்று கல்லூரியில் உள்ள அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்தோம். அப்போது எதிர்பாராத விதமாக மேற்கூரையில் சுத்தம் செய்த கோகுல் தவறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்று கூறினர்.
ஆசிரியர்களின் அலட்சியத்தால் மாணவன் உயிருக்கு போராடி வரும் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.