அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப் படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும் போது உதட்டளவில் கூட பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எந்த வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப் படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும், அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வந்தார். சேலம் வந்த அவருக்கு சேலம் விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சாலையில் இருபுறமும் நாட்டுப்புறக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் அனைவரும் முதல்வருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பளித்தனர் . முதல்வர் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சேலம் அரசு இசைப் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். 




மேலும், இந்த விழாவில் 30,837 பயனாளிகளுக்கு 168.64 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் - பன்னீர்செல்வம், வீடடுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் - முத்துச்சாமி, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், காவல்துறை ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர் உள்பட பல்வேறு அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இதே போன்று தேசிய கீதம் விழா முடிவில் பாடப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கை தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தேசப் பற்றாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.