தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் “நமக்கு நாமே” திட்டத்தினை ரூ.300 கோடி மதிப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சேலத்தில் தொடங்கி வைத்திருக்கிறார். இதன் மூலம், சென்னை மாநகராட்சி, சேலம், மதுரை, கோவை, நெல்லை உள்பட அனைத்து 14 மாநகராட்சிகள், அனைத்து 121 நகராட்சிகள் மற்றும் அனைத்து 528 டவுன் பஞ்சாயத்துகளிலும் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படும்.



அதன்படி நகர பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிகளை மேம்படுத்துதல், பொது சுகாதார மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதேபோல், இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கிராமங்களில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வரும் நிலையில், நகரங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு சார்பில் தற்போது நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேலத்தில் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்கள், இதர மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வேலைதேடுவோர் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணியாளர் அட்டை வழங்கப்பட உள்ளது. 



பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் பணி வழங்கப்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம், அவர்களது பணிகளின் அடிப்படையில் வழங்கப்படும். பணியாளர்களுக்கான குறைதீர் அமைப்பும் உருவாக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டு திட்டம் தயாரித்து, இயற்கை வள மேலாண்மை, வெள்ளத் தடுப்பு மற்றும் இதர பணிகள் என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளப்படும். இதைக் கண்காணிக்க மாநில அளவிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிதியில் 85 சதவீதம் தமிழக நிதிநிலை அறிக்கை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதம் நிதியானது உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.54.01 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதேபோன்று பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.38.53 கோடி மதிப்பீட்டில் 83 முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில்  30,837 பயனாளிகளுக்கு ரூ.168.64 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.


இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  பன்னீர்செல்வம், வீடடுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் - முத்துச்சாமி, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்பட பல்வேறு அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.