சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனை பழைய வழக்கில் கிச்சிப்பாளையம் காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிகண்டனின் தாய், மணிகண்டனின் சகோதரர்கள் மற்றும் மனைவி உட்பட ஏழு பெண்கள் அவர்களது குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற பெண்களை தடுக்க முயன்றனர். இருப்பினும் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் ஆட்டோவில் குண்டுகட்டாக ஏற்றி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடி செல்லதுரை கொலை வழக்கில் சின்னவர் என்ற ரவுடி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார். ஓமலூரில் தங்கியிருந்த சின்னவர் வேலைக்காக கிச்சிபாளையம் வந்தபோது, செல்லதுரையின் கூட்டாளிகள் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சின்னவரின் சகோதரர் மணிகண்டனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் விடுவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)