தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபாண்டிற்கான கரும்பு அரவை பணி கடந்த 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கரும்புகளை அரவைக்காக அறுவடை செய்து வாகனங்களில் ஏற்றி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கரும்பு அரவை பணி தொடங்கிய நாளே, திடீரென கரும்புப்பால் தேக்கி வைக்கப்படும் தொட்டியில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்பு அரவை பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரும்பு பால் தேய்க்க வைக்கப்படும் தொட்டியை சரி செய்யும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் மூன்று நாட்களாக கரும்பு அரவை நடைபெறவில்லை. இந்நிலையில் கரும்பு அரவைக்காக 250க்கும் மேற்பட்ட வாகனங்களில் கரும்புகள் தயார் நிலையில் ஆலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கரும்பு அரவை தாமதமாகப்படுவதால் வாகனங்கள் வாடகைக்கு செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுநர்கள் மூன்று நாட்களாக உணவு கூட வழியில்லாமல், வாகன ஓட்டுனர்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் மூன்று நாட்களாக கரும்பு அரவைக்கு எடுக்காததால், வாகனங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எடை குறைவதால், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்காத சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனை அடுத்து விவசாயிகளும் வாகன ஓட்டிகளும் ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். தங்கள் கரும்புகள் அரவை செய்யாமல், நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், வாடகை ஓட்ட முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு ஆலை நிர்வாகம், வாகனங்களுக்கு நாளொன்றுக்கு 600 ரூபாய் காத்திருப்பதற்கான வாடகை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் வாகன ஓட்டிகள் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனிடையே இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி மணிக்கு 30 ரூபாய் எனவும் நாளொன்றுக்கு 720 ரூபாய் காத்திருப்பு வாடகை வழங்கப்படுவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் விவசாயிகளுக்கு கரும்பு தற்போது உள்ள எடையை பதிவு செய்து, அதற்குரிய விலை கொடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் ஆலை நிர்வாகம் கொடுக்கின்ற இழப்பீடுகள் போதிய அளவிற்கு இல்லை. எனவே உடனடியாக ஆலையை சரி செய்து கரும்பு அரவை பணி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், லாரி ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆலை நிர்வாக மேலாண்மை இயக்குநர் ரஹமத்துல்லா கானிடம் கேட்டபோது, கரும்பு பால் தொட்டியில் கசிவு ஏற்பட்டதால், அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்து வரும் வெள்ளி கிழமை, கரும்பு அரவை பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.