தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் வெயிலின் அளவு 108 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதோடு, வெப்ப காற்றும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மதிய நேரத்தில் இயங்கும் செல்லாமல் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



குறிப்பாக ஏற்காடு மலை பிரதேசம் என்பதால் வெயிலின் தாக்கம் தெரியாமல் குளிர்ந்த நிலையில் எப்போதும் இருக்கும். ஆனால் இந்த முறை கோடை காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்காட்டில் எந்த ஆண்டு வெப்பம் பதிவாகி இருந்தது. கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் தமிழக மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பை சிதைக்கும் விதமாக மதிய நேரங்களில் ஏற்காட்டிலும் கடுமையான வெயில் நிலவி வந்தது. இதனால் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் மாலை நேரத்தில் ஏற்காட்டை ரசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று மதியம் ஏற்காட்டில் திடீர் மழை பெய்தது. இதனால் ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக, ஏற்காடு பேருந்து நிலையம் படகு இல்லம், அண்ணா பூங்கா, சேர்வுராயன் மலை, லேடிஸ் சீட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் திடீர் மலையால் ஏற்காட்டில் வெப்பம் தணிந்து ஏற்காட்டிற்கு உண்டான குளிர்ந்த நிலையில் இருந்து வருகிறது. 



இதேபோன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நகரப் பகுதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து இடி மின்னல் ஏற்பட்டு வருவதால் சேலத்தில் மழை வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சேலத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு லேசான சாரல் மழை பெய்து வருவது வெயிலில் தாக்கத்தை குறைத்து சற்று குளிர்ந்த நிலையில் சேலம் உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய அன்று வெப்பத்தின் தாக்கம் குறைந்து லேசான மழை பெய்து வருவதால் சேலம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.