சேலம் ஏற்காடு தனியார் பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "ஏற்காடு பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது ஒன்பது பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப நடவடிக்கை எடுத்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பேருந்து விபத்தில் விவகாரத்தில் அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம், படுகாயம் அடைந்தவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இறந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் சிறுகாயம் அடைந்தவர்களின் அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்க வேண்டும் ஏனென்றால் ஏழை மக்கள் இந்த விபத்து காரணமாக பணிக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள். தனியார் பேருந்தில் 69 பேர் பயணம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. மலைப்பகுதியில் அதிக பயணிகளை ஏற்றி வந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்காடு மலைப்பாதையில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று தொடர்ந்து மக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே அரசு 2021-22 நிதிநிலை அறிக்கை மற்றும் 2022-23 போக்குவரத்து மானிய கோரிக்கை மற்றும் 2023-24 நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் வாங்குவதாக தெரிவித்தார்கள். ஆனால் வாங்கவில்லை. தற்போது தான் ஆயிரம் பேருந்துகள் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இதுவரை 500 பேருந்தில் வாங்கியுள்ளதாக மட்டுமே தகவல் கிடைத்துள்ளது. பழைய பேருந்துகள் மட்டுமே சீரமைப்பதாக கூறுகிறார்கள்.



 


தற்போது தமிழகத்தில் இயங்கும் பேருந்துகள் பழுதடைந்த பேருந்துகளாகவே உள்ளது. பேருந்துகள் ஆங்காங்கே பழுதடைந்து நின்று விடுகிறது. இந்த நிலையில் தான் அரசு பேருந்துகள் இயங்கி வருவது வருத்தம் அளிக்கிறது. மக்களிடம் பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள் புதிய பேருந்துகளை வாங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் இதுவரை வாங்கவில்லை அதிமுக 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் 14,500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாங்கிய காரணத்தினால்தான் தற்பொழுது அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. ஆகவே பழைய பேருந்துகளை வைத்து இயக்கவே முடியாது. ஏனென்றால் அனைத்து பேருந்துகளும் பழுதடைந்து விட்டது பயணிகளும் அச்சத்துடன் தான் பயணித்து வருகிறார்கள். ஓட்டுனர்களும் பலமுறை புகார் கூறியுள்ளனர். சில நேரங்களில் மழை காலங்களில் பேருந்துகளில் மழை நீர் ஒழுகுகிறது. இதையெல்லாம் இந்த திமுக அரசாங்கம் கவனிக்கவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெர்மன் நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் தான் தற்பொழுது மின்சார பேருந்துகள் கிடைக்கிறது” என்றார்.


எடப்பாடி பழனிசாமி ரகசிய பயணம் குறித்த கேள்விக்கு, ரகசியமாக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது குறித்து எல்லாம் கேள்வி எழுப்ப மாட்டீர்கள். ஸ்பெயின், துபாய், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்கள் எல்லாம் கேள்வி கேட்க மாட்டீர்கள். கேரளாவிற்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றேன். இதை பட்டிமன்றம் வைத்தா சொல்லிவிட்டு செல்ல முடியும். ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்று எவ்வாறு சிகிச்சை பெறலாம் என்று ஆலோசனை கேட்பதற்காக சென்றேன். அதிக நேரம் நின்று காலின் சதை திரும்பியதால் அது தொடர்பாக ஆயுர்வேத சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக கேரளா சென்றேன். சைக்கிளில் சென்றால் பளு தூக்கினால் முதல்வரை விளம்பரப் படுத்துங்கள். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீருக்காக போராட்டம் செய்து வருகிறார்கள் அதைப் பற்றி செய்தி வருவதில்லை. 


வறட்சியான காலத்தில் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வரும் நிலையில் தமிழகத்தில் வரலாறு காணாத வெயிலின் தாக்கம். இதனால் எங்கு பார்த்தாலும் குடிநீர் கட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையெல்லாம் திமுக அரசாங்கம் கவனிக்கவில்லை இது குறித்து எல்லாம் தமிழக முதல்வர் கவனம் செலுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊடகத்திலும் செய்தி வந்தால் உடனுக்குடன் அதனை சரி செய்வோம். இன்றைய ஆட்சியாளர்களுக்கு அதையெல்லாம் செய்வதில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பதற்கு முழு அளவில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. அதுதான் நாட்டிற்கு முக்கியம் என்று கேள்வி எழுப்பினார். நாட்டிற்கு குடிநீர் முக்கியமல்ல. பீர் தான் முக்கியம். திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததோ மதுபானத்தில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. ஏனென்றால் அதில் தான் அதிக வருமானம். திமுக ஆட்சி பொறுப்பு முன்பு எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்தது‌. ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்கள் எத்தனை தடுப்பணைகள் காட்டினார்கள் என்று கேள்வி எழுப்பினார். 


தமிழகத்தில் கோடைகாலத்தில் வறட்சி நிலவி வருகிறது‌. மேலும் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நன்றாக மழை பெய்தது அப்போது ஏரி குளங்களில் தண்ணீர் தேக்கி வைத்திருந்தால் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரும் மக்களுக்கு தேவையான குடிநீரும் கிடைத்திருக்கும். இதையெல்லாம் செய்யவில்லை தடுப்பணைகள் கட்டப்படவில்லை எந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அனை நிரம்பி உபரி நீர் வீணாக கடலில் கலந்தது. 20% தான் பணிகள் நிறைவிடாமல் இருந்தது அவ்வாறு இந்த பணிகளை நிறைவேற்றி இருந்தால் சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்திருக்கும். அத்திக்கடவு, அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் 85 சதவீதம் பணிகள் நிறைவேற்றப்பட்டது. வெறும் 15 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்படாமல் இருந்தது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டிருந்தால் வறண்ட ஏரியில் அனைத்தும் நிரப்பப்பட்டிருக்கும் இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் பயனடைந்திருக்கும் என்று கூறினார்.



தலைவாசல் கால்நடை பூங்கா வேண்டும் என்று திட்டமிட்டு திறக்கப்படாமல் உள்ளது இவற்றை திறப்பதற்கு இவ்வளவு நேரம் ஆகும். இந்த திட்டத்தை அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்டது என்பதால் முடக்க வேண்டும் என்பதற்காக தான் திறக்கப்படாமல் முடி வைத்துள்ளனர். 


தீவட்டிப்பட்டி கலவரம் குறித்து இரண்டு சமூகத்தை சேர்ந்த மக்களை அழைத்து சுமூகமாக உடன்பாடு ஏற்படுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இங்கு அமைதி நிலவ வேண்டும் இதை பெரிது படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்த பகுதியில் ஏதோ ஒரு சில காரணங்களால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது வருத்தம் அளிக்கிறது திமுக அரசு உரியமுயற்சி செய்து சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.


வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் இடங்களில் அடிக்கடி சிசிடிவி கேமராக்கள் பழுதடைவதற்கு திமுக நிர்வாகக் கோளாறு தான் பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் தேர்தல் காலத்தில் வாக்குப்பெட்டிகள் வைத்திருந்த பகுதியில் எந்த பிரச்சினையில் நடைபெறவில்லை முறையாக பாதுகாக்கப்பட்டது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கோடை காலத்தில் மின்சாரம் எவ்வளவு தேவைப்படும் முன்கூட்டியே அறிந்து அதற்கான நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். தமிழகத்தை பற்றி அக்கறை இல்லாத முதலமைச்சர் இந்திய கூட்டணி பற்றி மட்டுமே தமிழக முதல்வருக்கு கவலை. மத்திய மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு கொள்ளையடிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது காவிரியில் கொடுக்க வேண்டிய பங்கு நீர் கர்நாடகா கொடுக்க மறுக்கிறது இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இருக்க வேண்டிய பங்கு நீரை கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை அவர் இருக்கும்போது என்ன பயன் உள்ளது. இந்திய கூட்டணியால் தமிழக மக்களுக்கு என்ன பயன். இந்த கூட்டணி மூலமாக நாட்டு மக்களுக்கு என்ன நன்மையை பெற்று தர போகிறார்கள் இருக்கும் நன்மையை பாதுகாக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.