அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க திமுக அரசு மற்றும் காவல்துறை முன்வராத நிலையில் தான் தனி மனிதனாக முன்வந்து அவர் மீது வழக்குகளை தொடர்ந்து வருவதாக பியூஸ் மனுஷ் தெரிவித்தார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் எண் நான்கு நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மனு அளித்துள்ளார். கடந்த 1956 இல் நிகழ்ந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, முத்துராமலிங்க தேவர், அண்ணாதுரை மற்றும் பிடிஆர்-ஐ எச்சரித்து மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்த அபிஷேகம் செய்யப்படும் என பேசியதாக அண்ணாமலை மீது சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் புகாரை எடுக்க மறுப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும், வரலாற்றில் பதிவு செய்யப்படாத தகவலை அண்ணாமலை பேசி மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டி மத நம்பிக்கை இல்லாதவர்களின் ரத்தத்தை மதுரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்வதாக, தான் எண்ண முடிகிறது எனவும் கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க திமுக அரசு மற்றும் காவல்துறை முன்வராத நிலையில் தான் தனி மனிதமாக முன்வந்து அவர் மீது வழக்குகளை தொடர்ந்து வருவதாக பியூஸ் மனுஷ் தெரிவித்தார். இதற்கு முன்பாக தீபாவளி பட்டாசு குறித்து இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது சேலம் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மீதான விசாரணைக்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அண்ணாமலை ஆஜராக சமன் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.