தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக இணைய வழி மூலம் ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த, பேடிஎம் கியூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் 4,68,595 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 498 முழுநேர நியாய விலை கடைகளும், 587 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் பகுதி நேர நியாய விலை திறக்கப்பட்டு வருகிறது. இதில் தருமபுரி அடுத்த அதகப்படி, சின்ன தடங்கம், செந்தில் நகரைச் சார்ந்த பகுதி மக்கள் நியாய விலை கடைக்கு, நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. சில நாட்களில் பொருட்கள் முழுவதுமாக கிடைக்காத சூழலும் இருந்து வருகிறது. இதனால் நீண்ட நாட்களாக பகுதி நேர நியாய விலை கடையை பிரித்துக் கொடுக்க வேண்டும் என செந்தில் நகர் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அதகப்பாடி கடையிலிருந்து, 215 குடும்ப அட்டைகளை பிரித்து செந்தில் நகரில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறக்கப்பட்டது. இந்த பகுதி நேர நியாய விலைக் கடையை, தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்த புதிய நியாய விலைக் கடையில் தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக கியூஆர் கோடு மூலம் பேடிஎம், கூகுள் பே போன்றவற்றில் பணம் செலுத்துவதற்கு வசதியாக இணைய வழி பண பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நியாய விலை கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு இணை வழி மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தி வருகின்றனர்.
மேலும், நாடு முழுவதும் எல்லா தரப்பிலும் உள்ள மக்கள் நவீன வசதி கொண்ட செல்போன்களை பயன்படுத்துவதால், பணத்தை கையில் வைக்காமல், செல்போனில் மூலமாக இணைய வழியில் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் அரசு அலுவலகங்கள் மற்றும் இணைய வழி சேவை மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் அரசு அலுவலகங்களில் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளிட்டவைகளுக்கு இணைய வழியின் மூலம் செலுத்த முடியாமல் மக்கள் பணம் கையில் எடுத்து வந்து நிலை இருந்து வந்தது. இதனால் பேருந்து பயணம், நியாய விலை கடை போன்றவற்றிற்கு வரும் வயதான முதியவர்கள் கையில் பணம் வைத்திருக்கின்ற பொழுது, தவறவிடுகின்ற சூழலும் இருந்து வருகிறது. தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக பேடிஎம் மூலம் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து, இணைய வழியில் பணம் பரிவர்த்தனை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளதால், கிராம மக்களுக்கு இது மிகுந்த வசதியாக இருப்பதாகவும், எல்லா இடங்களிலும் நவீன செல் போன் மூலமாக பணப் பரிவர்த்தனை செய்து வரும் நிலையில் தற்போது நியாய விலைக் கடைகளிலும் தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த இணைய வழி திட்டத்தின் மூலம் பணப்பதிவு எத்தனை சேவையை மாவட்ட முழுவதும் உள்ள 1087 நியாய விலை கடைகளிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.