தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த சாய் நகர் பகுதியைச் சேர்ந்த தன்கதிர் செல்வன் (47) என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி லாவண்யாவும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காலையில் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர். தொடர்ந்து மாலை மகன் இனியன் பள்ளியில் வகுப்பு முடிந்து, வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த பொழுது, பீரோவில் இருந்த பொருட்கள் கிழே சிதறி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து, அருகிலுள்ள இருந்த தனது சித்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அப்பாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த தன்கதிர் செல்வன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சீட்டு பணம் 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதனையடுத்து தன்கதிர்செல்வன் பொம்மிடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
மேலும் இதேப்போல் பக்கத்து தெருவில் வசித்து வரும் முருகன் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்று, தற்பொழுது அரூர் பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் பணியாற்றி வருகிறார். முருகன் வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவார். இந்நிலையிலு அவரது மனைவி மலர் மட்டும் வீட்டில் இருந்த வருகிறார். தொடர்ந்து மலர் அருகில் இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்துகொண்ட மர்ம நபர்கள் யாரும் இல்லாத சமயத்தில், சிசிடிவி கேமராவின் மேல் துண்டை போர்த்தி விட்டு, வீட்டை உடைத்து வீட்டில் இருந்த 4 சவரன் நகை மற்றும் உண்டியல் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 8ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றுள்ளனர். ஒரே இடத்தில் அடுத்தடுத்த இரண்டு வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அரூர் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா, பொம்மிடி காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) பாஸ்கர்பாபு விசாரணை நடத்தினர். மேலும் தடையவில் நிபுணர்களை வரவழைத்து, சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரித்தனர். மேலும் அருகில் சிசிடிவி கேமராக்களில் மர்ம நபர்கள் குறித்து காட்சிகள் பதிவாகியுள்ளதாக என ஆய்வு செய்தனர். பொம்மிடிபடுதியில் அடுத்தடுத்த நடந்த கொள்ளை சம்பவம் குறித்து, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன், இதே பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.