தருமபுரி மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில், இருப்பு வைத்து விற்பனை செய்வதாகவும், தடை செய்யப்பட்ட ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை விற்பனை செய்வதாகவும், மீன் கெடாமல் இருக்க ஃபார்மலின் தெளித்து விற்பனை செய்வதாக தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு பல் புகார்கள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் பானு சுஜாதா மற்றும் தருமபுரி மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, மீன் வளத் துறையினர் இணைந்து தருமபுரி நகரில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் திடீரென சோதனை நடத்தினர்.
தருமபுரி சந்தைப்பேட்டை, பேருந்து நிலையம் பென்னாகரம் சாலையில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை செய்தனர். அப்பொழுது மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பார்மலின் தெளிக்கப்பட்டு இருக்கிறதா? என்பதை அறிய உணவு பாதுகாப்பு துறையினர் மீன்களை எடுத்து சோதனை செய்தனர். இதில் ஒரு சில கடைகளில் பழைய மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கெட்டுப்போன நிலையில் இருந்த பாறை மீன், எறால் மீன், ஆற்று கெளுத்தி மீன் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த சுமார் 130 கிலோ கெட்டுப்போன மீன்களை எடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் பெனாயில் ஊற்றி அழித்தனர். தொடர்ந்து பழைய மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்த 5 மீன் கடைகளுக்கு தலா இரண்டாயிரம் என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, பணத்தை வசூலித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடைகளில் சோதனை நடத்தி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பானு சுஜாதா, இறைச்சி மற்றும் மீன்களை இருப்பு வைத்து விற்பனை செய்யக் கூடாது, அவ்வாறு வைப்பதால், அதை உண்ணும் போது உடல் நிலை பாதிக்கப்படும். தொடர்ந்து விற்பனை செய்யும் கடை மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பணியாற்றுபவர்கள், கட்டாயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியினை போட்டிருக்க வேண்டும்.
மேலும் கடையின் விற்பனையாளர்கள் மற்றும் இறைச்சி, மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்தும், சமூக இடை வெளியை பின்பற்றி விற்பனையை செய்ய வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என, இறைச்சி மற்றும் மீன் கடை உரிமையாளர்களை உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர். தொடர்ந்து தருமபுரி நகர பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினரின் திடீர் சோதனையால், வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.