சேலம் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, யாரிடமிருந்து யாரை பாதுகாக்க இந்திய கடற்படை உள்ளது. என் மீனவ மக்களை பாதுகாக்கவே நெய்தல் படை அமைப்பேன் என்றேன். ஊர் காவல்படை, காவல்படை போல மீனவர்களை பாதுகாக்க நெய்தல் படை அவசியம். நான் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நெய்தல் படை அமைப்பேன். கேரளாவில் நீலப்படை அமைத்து அதில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார். அதேபோல் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நெய்தல் மீட்சி இயக்கம் தொடங்கப்படும் என்கிறார்.



அதிகாரத்தில் இருப்பவர்கள் சொன்னால் குற்றமல்ல; நான் சொன்னால் குற்றமா? என கேள்வி எழுப்பினார். நா.த நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை என்பது வெறும் அச்சுறுத்தவே. இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். என் வீட்டில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை நடத்த முடியவில்லை. இதில் இருந்தே எனக்கு பணம் வரவில்லை என்பது தெரிகிறது. ஓமலூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களை பார்த்து துப்பாக்கி தயார் செய்தவர்கள் என் கட்சிகளை சேர்ந்தவர்களே இல்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எங்கள் மீது விசாரணை என்றால் தேர்தல் நேரத்தில் எங்களை சமாளிக்க முடியாமல்தான். சண்டிகரில் நடந்த மேயர் தேர்தலில் பாஜக நடந்து கொண்ட விதத்தை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது. இவர்களை மக்கள் எப்படி நம்புவார்கள். பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளும் விதம், ஆட்சியை கலைக்கும் விதம் போன்றவற்றை மக்களே அறிவார்கள். சீலன் என்பவரோடு எங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறுகிறார்களே, ஜெர்மனில் இருக்கும் சீலனை ஏன் இன்னும் விசாரிக்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார். நான் உயிரோடு இருக்கும் வரை என் கட்சியும், லட்சியமும் இருக்கும். கூட்டணி குறித்த கேள்விக்கு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்க அதிபர் பைடனுடன் கூட்டணி என கிண்டல். விஜய் உடனான கூட்டணி குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.



மேலும், ஆட்சியில் இருப்பவர்களின் தனியார் மயமாக்கல், இந்த மண்ணுக்கு என்ன செய்தார்கள், மக்களின் நலன், அவர்களின் எதிர்கால வாழ்வு உள்ளிட்டவற்றை சீரழித்தது குறித்து தேர்தல் பரப்புரையில் பேசுவேன். 10 ஆண்டுகால ஆட்சியில் இந்த நாடு வளர்ச்சி அடைந்ததா என கேள்வி எழுப்பிய அவர், இந்த நாடு அடிமை பட்டு கிடக்கும் போது, நாட்டின் விடுதலைக்காக ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி போராடியதா? என்றார். 2040ல் இந்தியாவை வல்லரசாக்க மாட்டார்கள், அதானி அம்பானியின் வீடாக அல்ல நாடாக இருக்கும். 2040ல் இந்திய நாடே இருக்காது. ரஃபேல் விமானம் வாங்கியதில் 200 ஊழல். ஆனால் அதற்கு இதுவரை பதில் இல்லை. இதேபோல் போர் கப்பலை ரஷ்யாவிலும், போர் விமானத்தை அமெரிக்காவிலும், பீரங்கியை இஸ்ரேலிலும் வாங்கி கொண்டு எந்த நாட்டுடன் சண்டை போட்டு மக்களை காப்பாற்றுவார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். ஈடி, ஈவிஎல், ஈவிஎம் மற்றும் தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணைய அதிகாரிகளை நீங்களே நியமிக்கலாம் என்கிற அதிகாரங்களை எல்லாம் வைத்து கொண்டுள்ளதோடு ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொரு கையில் வாக்கு பெட்டியும் வைத்து கொண்டு இருக்கும்போது எங்களால் என்ன செய்ய முடியும். சந்திர மண்டலத்திற்கு சந்திராயானை அனுப்பி நாம் புமியில் இருந்து அதை இயக்கியதை போல ஈவிஎம்-ஐ ஒரு அறையில் இருந்து இயக்க முடியாதா என கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வில் மூக்குத்தியில் பிட்டு கொண்டு வந்து விடுவார்கள் என கூறும் மத்திய அரசால் இதை செய்ய முடியாதா நேர்மை என்றால் வாக்குச்சீட்டு முறைக்கு வர வேண்டும். மக்களை சந்திக்காதவர்கள்தான் இந்த ஆட்சியில் அமைச்சர்களாக உள்ளனர். எனவே ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை நேரடியாக சந்தித்தவர்களாக இருக்க வேண்டும். மத்தியில் ஆளும் மோடி ஆட்சியை அடக்க வேண்டும் என்றால் புரட்சி வெடிக்க வேண்டும் இதற்கு இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும் என்று கூறினார்.