சேலத்தில், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். சேலம் மாநகர் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரான நத்தம் விஸ்வநாதன், மற்றும் முன்னாள் அமைசரசர்கள் ஜெயக்குமார், செம்மலை, ஓ.எஸ். மணியன், தங்கமணி, கே.பி. அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஆர்.பி. உதயகுமார், வைகைச் செல்வன், பாலகிருஷ்ண ரெட்டி, சரோஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்குமார், சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அமைப்புசாரா தொழிலாளர்கள், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர், சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், நிலத்தரகர்கள் மற்றும் கட்டிட விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள், கைத்தறி மட்டும் பட்டு நெசவாளர்கள் சங்கத்தினர், லாரி உரிமையாளர் சங்கத்தினர், மருந்து நிறுவன உரிமையாளர் சங்கத்தினர், சிறு, குறு தொழிற்சாலை உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.


கருத்துகேட்பு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களையும், தொழிலாளர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமையும்.



திமுக முன்பு அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவர்களின் கோரிக்கைகளை அவர்களே குப்பை தொட்டியில் வீசிவிட்டனர். திமுகவின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. திமுக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் அதிமுகவை நம்புகிறார்கள். அதிமுக பொதுச் செயலாளரையெம் மக்கள் முழுமையாக நம்புகின்றனர். அதனால்தான் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பொதுநல சங்கங்களும் நம்பிக்கையுடன் இங்கு கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். அதற்கான நடவடிக்கைகள் பொதுச் செயலாளர் மேற்கொள்வார். திமுக வெளியிடுவது நம்பியார் அறிக்கை. அதிமுகவின் தேர்தல் அறிக்கை எம்ஜிஆர் அறிக்கை. பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற வழக்கம் அதிமுகவிற்கு கிடையாது. இவ்வாறு அவர்  கூறினார்.