சேலம் மாநகர் முள்ளுவாடிகேட் மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். கணவரைப் பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தாய் இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் கல்லூரியில் படித்துவரும் மகளும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் மகனும் உள்ளனர். கடந்த மாதம் 28 ஆம் தேதி காலை இரண்டாம் அக்ரஹாரம் பகுதியில் தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார். இது குறித்து டவுன் காவல் ஆய்வாளர் மோகன் பாபு கண்ணா மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர், சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பஸ்சில் விழுவதற்கு ஓடி சென்றபோது மோட்டார்சைக்கிள் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதில் மோதி பாப்பாத்தி கீழே விழுந்ததும், இரண்டாவதாக வந்த பஸ்சிற்குள் ஓடிச்சென்று விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. விபத்து என்று முதலில் வழக்குபதிவு செய்த நிலையில் இந்த விபத்திற்கு நான் காரணம் இல்லை என்று ஓட்டுநர் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தபோது பாப்பாத்தி தானாகவே பேருந்தின் முன்பு விழுந்து தற்கொலை செய்தது காட்சிகளில் பதிவாகியுள்ளது.



இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில், பாப்பாத்தியின் மகள் மற்றும் மகன் இருவரும் கல்லூரி பயின்று வருகின்றனர். கல்லூரி படிப்பிற்கான கட்டணத்தை இருவருக்கும் கட்ட முடியாத நிலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வறுமையில் வாழ்ந்து வந்துள்ளதால் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். அப்பொழுது விபத்தில் இறந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று யாரோ கூறியுள்ளனர். இதனால் பேருந்தில் விழுந்து உயிரிழந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும், அதில் குழந்தைகள் பிழைத்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.


விபத்தில் இறந்தவர்களுக்கு மட்டுமே விபத்துக்கான நிவாரணம் நீதிமன்றம் மூலமாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இதில் பாப்பாத்தி அவராக பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலையில் ஈடுபட்டுள்ளதால் நிவாரணம் கிடைக்குமா என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண