சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள உம்மளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது சகோதரர் மணிகண்டன் (மாற்றுத்திறனாளி). இருவரும் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்குள் வந்து அவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவரையும் மீட்டு டவுன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இருவருக்கும் அவர்களின் பெற்றோர் விட்டுச் சென்ற வீடு மற்றும் விவசாய நிலத்தில் பங்கு தராமல், இருவரின் சித்தப்பா மற்றும் பெரியப்பா குடும்பத்தினர் அபகரித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. பெற்றோரின் சொத்தில் தங்களுக்கு பங்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருவரும் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



 


மற்றொரு நிகழ்வில் சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கி வந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சேலம் கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட சதீஷ்குமாரிடம் கஞ்சா மொத்த வியாபாரிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சதீஷ் குமாருக்கு கஞ்சா விற்பனை செய்த கனகராஜ் என்பவர் உடல்நல பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கருப்பூர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த தனது சகோதரரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் அடித்து அழைத்து சென்றதாக கூறி, கனகராஜியின் சகோதரிகளான உமா, சுகன்யா ஆகிய இருவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து காவல்துறையிடம் தனது சகோதரரை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி முறையிட்டனர். பின்னர் இருவரும் காவல்துறையினர் காலில் விழுந்து கதறிஅழுதனர்.உடனே காவல்துறையினர் இருவரையும் மனு வழங்க ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.



அதன்பின் சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் சேலம் மகளிர் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு சீருடையின் மேல் கோட்டு தயாரிக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயின்ற அரசு மாணவிகளுக்கு பள்ளி சீருடையின் மேல் கோட்டு தைத்துக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஒரு சீருடைக்கு 35 ரூபாய் வீதம் அரசு நிர்ணயம் செய்தது. இதற்கான பணம் சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்ட மகளிர் தொழில் கூட்டுறவு சங்க பெண்களுக்கு, வங்கி கணக்குகளில் வழங்கப்படும் என்று தீர்மான பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக்கொண்டு இதுவரை இரண்டு ஆண்டுகளுக்கான பணத்தை தராமல் வருவதால் அதற்கான பணத்தை பெற்று தரும்படி, நூற்றுக்கு மேற்பட்ட தொழில் கூட்டுறவு சங்க பெண் உறுப்பினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த சங்கத்தின் தலைவியாக கௌரி மேனகா என்பவர் இருக்கும் நிலையில் அவரது மாமியார் அதிமுக பிரமுகர் ஜமுனாராணி தலைவர் போல் செயல்பட்டு சங்கத்தின் உறுப்பினர்களை மரியாதை குறைவாக பேசுவதாக குற்றம்சாட்டினர். மேலும் பள்ளி சீருடை மேல் கோட்டு தைப்பதற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்துள்ளனர்.