சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் செயல்பட்டு வந்த சாய் விஹார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதலும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக கூறி, பள்ளியை மூன்று நாட்களில் மூடும்படியும், மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் சேலத்தில் உள்ள வட்டார கல்வி அதிகாரி, ஆகஸ்ட் 2ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து பள்ளி சார்பில் அதன் நிறுவனர் குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, சேலத்தில் பல பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதல் இல்லாமலும் நீண்ட காலம் இயங்கி வருவதாகவும், 2011 முதல் அங்கீகாரம் பெற முயற்சித்து வரும் நிலையில் இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், அங்கீகாரம் கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் பள்ளி நிறுவனர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி பள்ளிக்கல்வித் துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அதேசமயம், சேலத்தில் அங்கீகாரமும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதலும் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 









ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது!

 



 

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணைநல்லூர் பகுதியில்  பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என்றும் சம்பந்தப்பட்ட தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

 

ஆனால்  மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி  காவல்துறைக்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், அந்த உத்தரவை ரத்து செய்து, போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

 

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி சதீஷ்குமார், ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனவும், எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து   போராட்டம் நடத்துவது மிருக வதை  தடைச் சட்டத்தை மீறிய செயல் என்பதால், எருமை மாட்டுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

 

அப்போது, விலங்குகளை பயன்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதை அடுத்து, போராட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து வழக்கமான நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல்துறைக்கு   உத்தரவிட்டுள்ளார்.