சேலத்தில் கடந்த வாரம் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னர் சாலை சீரமைக்கப்பட்டது இன்று போக்குவரத்து துவங்கியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி இரவு ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். குப்பனூர் வழியாக செல்லும் வாகனங்கள் சேலம் - ஏற்காடு பிரதான சாலை வழியாக ஏற்காடு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆறு நாட்களுக்குப் பின்பு குப்பனூர் - ஏற்காடு வழியாக இன்று மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதனால், சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சிவ சண்முகராஜா மற்றும் சேலம் மாவட்டம் ஆட்சித் தலைவர் கார்மேகம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும், சேலம் - குப்பானூர் - ஏற்காடு மலைப்பாதையில் பல கிராமங்கள் உள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதால் பேருந்துகளை இவ்வழியாக இயக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன. வழக்கத்தைவிட இந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் 16% மழை கூடுதலாக பெய்துள்ளது. இருப்பினும், சேலம் மாவட்டத்தில் உள்ள 430 நீர் நிலைகளில் 228 நீர் நிலைகள் சரியான முறையில் தூர்வாரப்படாத தால் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் அதே நாள் இரவு பெய்த கனமழையால் டி. பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி அதன் கரை உடைந்ததில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது. இதில் 2 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. மேலும் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்து, அரிசி, பருப்பு, உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் தேடி வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட பகுதியை எவ்வித அரசு அதிகாரிகளும் பார்வையிட்டு மீட்பு பணியை மேற்கொள்ளவில்லை அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனை அறிந்தவுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் 4 கி.மீ. நடந்து சென்று கிராம மக்களை சந்தித்தார்.