டிஎன்பிஎல் ஆறாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சேலம் ஸ்பாட்டன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 



முதல் இன்னிங்ஸ்:


திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 ரன்களுக்கு ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய சிவம் சிங் 2 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய விமல் குமார் மற்றும் பாபா இந்திரஜித் பொறுப்புடன் விளையாடி திண்டுக்கல் அணிக்கு ரன்களை சேர்த்தனர். இருவரும் இணைந்து 48 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தனர். இந்த நிலையில் விமல் குமார் 32 பந்துகளில் 47 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். திண்டுக்கல் அணியில் அதிரடியாக பேட்டிங் செய்த பாபா இந்திரஜித் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். இது அவரது ஆறாவது டிஎன்பிஎல் அரை சதம் ஆகும். பாபா இந்திரஜித் 34 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வீரர்கள் பூபதி 8 ரன்களுக்கும், சரத் குமார் 5 ரன்களுக்கும், கிஷோர் 2 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடிய தினேஷ் ராஜ் கடைசி பந்தல் ரன் அவுட் ஆனார். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய சன்னி சந்து மற்றும் ஹரிஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பொய்யாமொழி மற்றும் ஸ்ரீநிவாஸ் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்து, சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயத்தது. 



இரண்டாவது இன்னிங்ஸ்: 


150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கவின் மற்றும் அபிஷேக் இணைந்து 50 ரன்களை அடித்தனர். அபிஷேக் 26 பந்துகளில் 28 ரன்கள் இருந்தபோது வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் மற்றொரு முனையில் களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் வீரர் கவின் பொறுமையாக விளையாடிய ரன்களை சேர்த்தார். சந்திப் வாரியர் வீசிய 12வது ஓவரில் சேலம் அணியின் வீரர் கவின் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். அதற்கு அடுத்த பந்தில் கீப்பர் பாபா இந்திரஜித்திடம் கேட்ச் கொடுத்து அரை சதத்தை தவறவிட்டு 46 ரன்களில் கவின் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக ஆடிய விவேக் 28 பந்துகளில் அரை சதம் அடித்து சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய வருண் சங்கரவர்த்தி, விக்னேஷ் மற்றும் சந்திப் வாரியர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் வீரர் விவேக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி டிஎன்பிஎல் 8வது சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.