தமிழகத்தில் மணல் தேவை அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக அரசு மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் குரங்குசாவடி பகுதியில் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில், மணல் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் மணல் குவாரிகளை திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், அதிகப்படியான மணல் குவாரிகளை திறந்து தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது உள்ளிட்ட 8 அம்ச தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 



கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணையன் கூறுகையில், "தமிழகத்தில் தற்போது ஆன்லைன் முறையில் மணல் விற்பனை நடைபெறுகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. தினமும் மணல் லாரி உரிமையாளர் களுக்காக 3 மணிநேரம் ஆன்லைன் மூலம் மணல் முன்பதிவு செய்ய அனுமதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள கனரக வாகனங்களுக்கான புதுப்பிப்பு கட்டணம் 13 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை வாபஸ் பெற்று மீண்டும் பழைய ரூ. 500 கட்டணத்தை செலுத்தும் வகையில் தமிழக அரசு உத்திரவிட வேண்டும். வருடம் ஒருமுறை சுங்க கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணம் 20 விழுக்காடு உயர்த்தும் நடைமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டு மணல் தமிழக மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு கூடுதலாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும். அரசு அனுமதிக்கும் அளவில் மணல் அள்ளப்படுகிறது என்பதை கண்காணிக்கும் நடைமுறையை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தருவது போல மணல் லாரி உரிமையாளர்கள் நலன்கருதி தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கண்ணையன் தெரிவித்தார்.