சேலத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடையில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி கடை உரிமையாளரை உறவினர்கள் சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டியார் நகரில் ஜெயின் ஹித்தீஸ் என்பவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இங்கு 6 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் அக்கடையில் விற்பனையாளராக பணியாற்றிய கோமதி என்பவருக்கு கடையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது. 



மேலும் கடையில் உள்ள ஓய்வு அறையில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் சிலர் நேற்றைய தினம் கடைக்குள் புகுந்து கடையின் உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். அப்போது கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பெண் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயின் ஹித்திசை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடையில் மேலாளராக பணியாற்றி வரும் பெண்ணிற்கும் அதே கடையில் பணியாற்றி வந்த கோமதிக்கும் இடையே ஏற்கனவே கருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் இதில் கடை உரிமையாளர் ஜெயின் ஹித்திஸ் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 



கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக இது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் கடை உரிமையாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் குறித்து இரு தரப்பினரிடமும் பள்ளப்பட்டி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடைக்குள் புகுந்து கடையின் உரிமையாளரை தாக்குதல் நடத்தியதாக கௌதமி மற்றும் அவரது கணவர் சந்தானம் உட்பட 5 பேரை சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.