சேலம் அருகே உடல்நிலை சரியில்லாமல் ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லாத மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்கியதாக மாணவனின் தாய் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.


சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. இவர் அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் கவியரசு உட்பட 3 பிள்ளைகள் உள்ளனர். மூவரும் சிந்தாமணியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கவியரசு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பில் இருந்துள்ளார். விடுப்பு எடுப்பதற்கு முன்னதாகவே தாய் பிரேமா பள்ளிக்குச் சென்று வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் கவியரசுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் மருத்துவ சிகிச்சை அளிக்க விடுமுறை தருமாறு கூறிவிட்டு வந்துள்ளார். 



கடந்த ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லாமல் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் இருந்த கவியரசை பார்த்த தலைமை ஆசிரியர் காமராஜ், கவியரசை அழைத்து ஒரு வாரமாக விடுமுறை ஏன் எடுத்தாய் என்று கூறி விசாரித்துள்ளார். அதற்கு உடல்நிலை சரி இல்லை என பதில் அளித்த கவியரசை உனக்கு உடல்நிலை நன்றாகத்தானே இருக்கிறது என்று, மாணவனின் ஜாதி பெயரை குறிப்பிட்டு உங்களுக்கு இதே வேலை தான் என்று கூறி கையால் தலையில் பலமாக பலமுறை தாக்கியுள்ளார். 


இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த கவியரசு பள்ளிக்கு வந்த தனது தாய் மாமாவிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் மாணவனை சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



இதுகுறித்து மாணவனின் தாய் பிரேமா கூறுகையில், எனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் பிரிந்து மூன்று வருடம் ஆகிறது. மூன்று குழந்தைகளை வைத்து காப்பாற்றி வருகிறேன். 3 குழந்தைகளும் சிந்தாமணியூர் மேல்நிலைப் பள்ளி படித்து வருகின்றனர். கடந்த வாரம் மகன் கலையரசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளியில் மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி தகவல் தெரிவித்து இருந்தேன். ஒரு வாரம் சிகிச்சை முடிந்த பிறகு இன்று பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் என் மகனை அழைத்து தகாத வார்த்தையில் பேசியும் தலையைப் பிடித்து சுவற்றில் அடித்து ஜாதி பெயரை சொல்லி பேசி உள்ளனர் என தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் நாங்கள் படிக்கச் செல்லக் கூடாதா என்றும் தாய் கண்ணீர் மல்க கூறினார். தனது மகனை தகாத வார்த்தையில் பேசி அடித்த தலைமை ஆசிரியர் மீது மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்கல்வித்துறையும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 


இது குறித்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் பதிலளிக்கவில்லை.