அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழாவை தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் அண்ணா பூங்கா அருகே உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பெங்களூர் புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதைத்தொடர்ந்து உடன் வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டார்.


பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, இந்த இயக்கத்தை தொடங்கியவர் புரட்சித்தலைவர். அந்த தலைவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அரசு திட்டங்கள் தமிழகத்திற்கு வந்திருக்காது. அம்மாவும் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தார். தற்போது 52 ஆண்டுகள் முடிந்து இந்த இயக்கம் 53வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதை நினைவு கூற முன்னாள் முதலமைச்சர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இருக்கிறேன் என தெரிவித்தார். 



ஆனால் இன்றைய நாளில் கூட முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, யாரையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் நீக்கியவர்கள், நீக்கியவர்கள்தான் என தெரிவித்திருக்கிறார். இது தவிர எந்த தியாகத்தையும் செய்ய தயார் என கூறி இருக்கிறார். அவர் எந்த தியாகம் செய்தார் என தெரியவில்லை. அவர் ஆட்சிக்கு வருவது தான் தியாகமோ என்னவோ தெரியவில்லை. இப்படியே சென்று கொண்டிருந்தால் சேலத்தில் ஒரு சீட் கூட அதிமுக வெற்றி பெற முடியாது. ஒற்றுமையாக இருந்தால் வெற்றி பெறலாம் இல்லை எனில் நிச்சயம் வெற்றி பெற முடியாது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஒற்றுமை என்ற வார்த்தைக்கு இடம் தர மறுக்கிறார். இது நியாயம் இல்லை அதிமுக மூத்த நிர்வாகிகள் செம்மலை, பொன்னையன் போன்றவர்கள் இதை கேட்க வேண்டும் என்றார். சர்வாதிகாரி கையில் அதிமுக உள்ளது. கட்சி அழிந்து கொண்டிருக்கிறது. இனியாவது குரல் கொடுங்கள். ஒருங்கிணைப்பு குழு அமைத்து கூப்பிட்டு பார்த்தார்கள், ஆனால் யாரும் ஒருங்கிணைவில்லை. சின்னம்மாவும் ஏதும் பேசவில்லை. மூத்த நிர்வாகிகள் இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எதிர்த்து நிற்பதில் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார். 



மேலும், சென்னை மிகக் கடுமையான வெள்ளத்தை வெள்ளத்தில் பாதிக்கும் என கூறுகின்றார்கள். ஆனால் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் மழைநீர் எங்கும் நிற்கவில்லை. இதனால் தமிழக அரசை பாராட்டுகிறேன். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் களப்பணியாற்றி இருக்கிறார். அவரையும் பாராட்டி இருக்கிறேன். அதிமுக பொதுச் செயலாளர் ஆட்சியில் இருந்தபோது 954 கிலோ மீட்டருக்கு 1000 கோடியில் மழை நீர் எங்கேயும் நிற்காதபடி திட்டம் கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் இப்போது அதை மறந்து விட்டு பேசுகிறார். இப்போது திமுக அரசை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறை கூறுகிறார் என பெங்களூர் புகழேந்தி கூறினார்.