சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பனங்காடு பகுதியில் அலெக்சாண்டர் என்ற மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார். இவர் தமிழக அளவிலான மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் அவரது கிராம பொது குடிநீர் குழாயில் தண்ணீர்விட மறுப்பதாக கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சொந்தமாக குடிநீர் குழாய் அமைத்துக் கொள்ள போதிய வசதி இல்லாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக குடிநீர் குழாயில் தண்ணீர் விட மறுப்பதாகவும், தனது குடும்பத்தில் உள்ள அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி என்பதால் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியவில்லை என்று கூறினார். எனவே தனது குடும்பத்திற்கு குடிநீர் குழாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மாற்றுத்திறனாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை எடுத்து போராட்டத்தை கைவிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக போராடியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும், தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தண்ணீர் வழங்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினர். எனவே கருணையின் அடிப்படையில் தனது குடும்பத்தை கொன்று விடுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாற்றுத்திறனாளிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்டு தண்ணீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.



இதேபோன்று, சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த செல்லம்மாள் (83) என்ற மூதாட்டி தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு முதியோர் உதவிதொகை கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கிடைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக பார்த்திபன் என்பவர் மூதாட்டியை இரண்டு கைகளால் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கிக்கொண்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து வித்தியாசமான முறையில் மனு வழங்கினார். இந்த மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். 


இதுகுறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி செல்லம்மாள் கூறுகையில், தனது மருத்துவ செலவிற்கும், உணவிற்கும் பயன்படுத்தி வந்த முதியோர் உதவித்தொகை பணம் இல்லாமல் வறுமையில் வாடி வருவதாக வேதனை தெரிவித்தார். மீண்டும் முதியோர் உதவி தொகை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். பின்னர் காவல்துறையினர் மூதாட்டியை சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு உள்ளே அழைத்து செல்லப்பட்டு மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.