இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அறிகுறிகளை காட்டியுள்ளது. ஆனால், தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்கா உறுதி அளித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கூறியுள்ள ஈரான், ஒரு விஷயத்திற்கு அனுமதியும் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

Continues below advertisement

“தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க உறுதியளிக்க வேண்டும்“

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அழைப்பு விடுக்கும் நிலையில், அது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மஜித் டக்ட் ரவன்ச்சி பிரபல பிரிட்டிஷ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க வேண்டுமென்றால், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடக்காது என்று அமெரிக்க உறுதியளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில், மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டும் என்பது குறித்து அமெரிக்கா அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளதாவும், ஆனால், தாங்கள் எந்த தேதியையோ, முறையையோ ஒப்புக்கொள்ளவில்லை என்று ரவன்ச்சி கூறியுள்ளார்.

Continues below advertisement

மேலும், மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும்போது, தங்கள் மீது தாக்குதல் நடக்குமா என்பதற்கான பதிலையே தாங்கள் தற்போது எதிர்பார்ப்பதாகவும், இந்த மிக முக்கியமான கேள்விக்கு, அமெரிக்கா தெளிவான பதிலை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பிறகு அதனுடன் அமெரிக்காவும் இணைந்துகொண்டு, ஜூன் 21-ம் தேதி தங்களின் 3 அணுசக்தி மையங்கள் மீது தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“யுரேனிய செறிவூட்டலுக்கு அனுமதி வேண்டும்“

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனியை குறி வைப்பதன் மூலம், ஈரானில் ஆட்சி மாற்றத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று அமெரிக்க தெரிவித்துவிட்டதாக ரவன்ச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில், ஈரான் யுரேனிய செறிவூட்டலை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் ரவன்ச்சி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கூறிய அவர், எந்த அளவு திறனில், எவ்வளவு செறிவூட்ட வேண்டும் என்பது குறித்து பேசிக்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், நீங்கள் யுரேனிய செறிவூட்டலை மேற்கொள்ளவே கூடாது என்றும், அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் உங்கள் மீது குண்டு போடுவோம் என்று கூறுவது காட்டில் உள்ள சட்டம் போன்றதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்த கூற்றுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாயால் பதிலளிக்கப் போகிறாரா அல்லது குண்டுகளால் பதிலளிக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.