செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருணகிரி (32). சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இருதய நோய் பிரிவு மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகி ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த அருணகிரி இன்று காலை பணி முடித்துக் கொண்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. 


ஆனால் மாலை 3 மணி ஆகியும் அவரது கார் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் நின்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சக மருத்துவர்கள் அவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொள்வதற்கு முயற்சித்துள்ளனர். ஆனால் அருணகிரி செல்போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த சக மருத்துவர்கள் அவரைத் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள கண்ணாடி மாளிகையில் தேடி உள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மருத்துவமனையின் கழிவறையில் ஒரு கழிப்பறையில் கதவு நீண்ட நேரமாக மூடி இருப்பதை அறிந்த மருத்துவர்கள் கழிப்பறையின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் யாரும் பதிலளிக்காததால் மருத்துவர்கள் கழிப்பறையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மருத்துவர் அருணகிரி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மருத்துவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த மருத்துவர் அருணகிரியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


 


முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் அருணகிரி மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என சக மருத்துவர்களால் கூறப்படுகிறது. சேலம் அரசு மருத்துவமனை காவல்துறையினர் மருத்துவர் அருணகிரி மாரடைப்பால் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரோ என்ற பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் அருணகிரி MBBS, மற்றும் MD, மருத்துவ படிப்பு முடித்து தற்பொழுது DM இருதய பிரிவு மேல் மருத்துவ படிப்பு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. சேலம் அரசு மருத்துவமனையில் இருதய பிரிவு மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மருத்துவர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.