சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் மற்றும் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் கடந்த 13ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள் துணை மேயர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியமாக மேயருக்கு ரூ. 30,000, துணை மேயருக்கு ரூ. 15,000 மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ. 10,000 வழங்க உத்தரவிட்டார். அதன்படி இன்று சேலம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டது. இதற்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.



பின்னர் மாமன்ற கூட்டம் தொடங்கி பல்வேறு தீர்மானங்கள் மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அதில் தொழில் வரி இனங்கள் பல மடங்கு உயர்த்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக குறுந்தொழில் நிறுவனங்கள் தொழில் உரிம கட்டணம் ஆண்டுக்கு 2500ல் இருந்து 5000 ரூபாயாகவும், சிறு தொழில் நிறுவனங்கள் 5000 ரூபாயிலிருந்து 7500 ரூபாயாகவும், நடுத்தர தொழில் நிறுவனங்கள் 8000ல் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், இதர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் 12,500ல் இருந்து 40 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தை வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகளில் சொத்து வரி, குடிநீர் வரி போன்று அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக தொழில் உரிம கட்டணம் உயர்த்தி உள்ளனர். இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இந்த தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். 



இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாநகராட்சியின் 44 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் பேசுகையில், சேலம் மாநகராட்சி கட்டிடத்தில் அம்பேத்கரின் திரு உருவ புகைப்படம் நிறுவுவதற்கு பல்வேறு முறை கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால் இதுவரை மாநகராட்சி கட்டிடத்தில் அம்பேத்கரின் திருவுருவப்படம் நிறுவப்படவில்லை என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், அம்பேத்கரின் திருவுருவப் புகைப்படம் பிரிக்க கொடுக்கப்பட்ட கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. விரைந்து கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து மேயர் மற்றும் ஆணையாளரிடம் தெரிவித்தனர். இறுதியாக மாமன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.