மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக இரண்டு தரப்பினர்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 


மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக கலவரம் நடந்த போதும் அதை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்த மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். மேலும் நாடு முழுவதும் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது எந்த விதம் நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறினர். மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளது. மணிப்பூர் முதல்வர் கூறியது போல அங்கு பெண்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளது. அது வெளிவரக் கூடாது என மத்திய அரசு நினைத்து அங்கு இணைய சேவையை முடக்கி வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்டவர்களை இதுவரை நேரில் சென்று சந்திக்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் தான் இந்த கொடூர சம்பவத்திற்கு காரணம். எனது அனைவரும் பதவி விலக வேண்டும் என்றும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். 



தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தின் போது அந்த வழியாக வந்த மணிப்பூர் இளைஞர் ஒருவர் நிர்வாகிகளிடம், “நான் மணிப்பூரிலிருந்து வந்துள்ளேன். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்கு அனுமதி வழங்குங்கள்” என்று கேட்டார். அப்போது பேசிய மணிப்பூர் இளைஞர், ”கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் வன்முறை நடைபெற்ற வருகிறது. அங்குள்ள எனது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பேசுவதில் சிக்கல் நீடித்து வந்தது. ஆனால் தற்போது பிரச்சனைகள் இருந்தாலும் மணிப்பூர் சற்று அமைதியாக உள்ளது. மணிப்பூர் மக்களுக்காக தமிழ்நாட்டில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். எங்கு சென்றாலும் மணிப்பூர் பிரச்சனையைப் பற்றி பேசுகின்றனர். இது எங்களைப் போன்ற மணிப்பூர் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்தில் உள்ளவர்கள் மணிப்பூர் பெண்களை தங்களது தாயாகவும், சகோதரியாகவும் பார்க்கிறீர்கள் உங்கள் அனைவருக்கும் மணிப்பூர் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என உருக்கத்தோடு உரையாற்றினார்.