சேலம் மாநகர் சுந்தர்லாட்ஜ் முதல் சுகவனேஸ்வரர் கோயில் வரையிலான முள்ளுவாடி கேட் மேம்பால பணிகள் தற்போது முடிவுற்ற நிலையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எஸ்.ஆர்.பார்த்திபன், "சேலம் மாநகரத்தில் முள்ளுவாடி கேட் இரயில்வே மேம்பாலம் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு காரணங்களால் பாலம் அமைக்க நடவடிக்கை பெரிய அளவுக்கு முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த கால ஆட்சியில் பணிகள் விறுவிறுப்பு இல்லாமல் நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு முழு வீச்சில் நடைபெற்ற பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நிலம் எடுக்கப்பட்டாலும் அந்த மக்களுக்கான பணம் சரியாக தராத காரணத்தால் அவர்கள் உச்சநீதிமன்ற வரை சென்றதன் விளைவாக இந்த பாலம் பணிகள் தடைப்பட்டு இருந்தது. தற்போது திமுக அரசு பதவி ஏற்ற பிறகு அந்த பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து பேசி உடனே அவர்களுக்கான கிளப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளையும் பேசி சமாதானப்படுத்தி அந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது. இதனால் வெற்றிகரமாக இந்த பாலம் சேலத்தின் மையப்பகுதியில் சேலம் வடக்கு, தெற்கு என்ற இரண்டு பகுதிகளாக பிரியப்படுகின்ற பகுதியை இன்றைக்கு இணைக்கக்கூடிய ஒரு பாலமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணிகள் முடிந்துள்ளது. 



மக்களின் இன்னல்களுக்கு ஒரு முடிவுரை எழுதுகின்ற வகையிலே இன்றைக்கு இந்த பாலம் பணிகள் மிகச் சிறந்த முறையில் முடிக்கப்பட்டு சேலத்தினுடைய அடையாளமாக விரைவில் இந்த பாலம் திறக்க இருக்கின்றது. இந்த பணிகள் முற்றிலுமாக முடிவுற்றிருக்கிறது. மீதி இருக்கிற 30 சதவீத பணிகளையும் நம்முடைய மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சர் அறிவுறுத்தலின் மூலம் விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கர் சிலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை புதிய பாலத்திற்கான நில எடுப்பு பணிகள் தற்போது 24 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளும் விரைவில் முடிக்கப்படும். இந்தப் பணிகள் நிறைவடைந்து சேலம் மக்களுக்கான போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக தவிர்த்து மிக எளிதாக வந்து செல்வதற்கான சூழலை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இதற்காக கடந்த நான்கரை ஆண்டு காலமாக பல்வேறு முயற்சிகள் எடுத்திருக்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கிறார் அவருக்கு எல்லாம் நன்றாக தெரியும். இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இருக்கக்கூடிய வழக்குகளுக்கு உதவி செய்திருக்கிறோம். தொடர்ந்து பேசப்பட்டதன் விளைவாக அவர்களும் இந்த தடை ஆணைகளை எல்லாம் நீக்கப்பட்டு இன்றைக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இந்த பணிகள் நடைபெற்றுள்ளது" என்றார். 



மேலும், “சேலம் மக்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பணி நிதி சார்பாக 129.5 கோடி நில எடுப்புக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான சேலத்தின் அடையாளமாக உள்ள சேலம் உருக்கு ஆலை தொடர்ந்து செயல்பட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி‌. இதற்காக பல முறை மத்திய உருக்காலை சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்று முறை சேலம் உருக்கு ஆலை சம்பந்தமாக பேசியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.