சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டார். நடைபயணமாக எடப்பாடி நகரப் பகுதியின் பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "என் மண் என் மக்கள் யாத்திரையில் பொதுமக்கள் அளிக்கும் வரவேற்பினை பார்க்கும்போது, தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராக உள்ளது தெளிவாக தெரிகிறது. 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்கும் போது, 12 லட்சம் கோடி ரூபாய் ஊழலை காங்கிரஸ் அரசு செய்திருந்தது. அதில் 50 சதவீத ஊழல் திமுக கட்சியினுடையது. முழு இந்தியாவும் மாற்றத்தை எதிர்பார்த்தபோது மோடி வந்தார். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, 2-வது முறையாக 303 எம்பிக்களுடன் ஆட்சியமைத்தார். 2024-ல் பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சியமைப்பார் என்பது உறுதியாகி விட்டது. தமிழகம் 2014 மற்றும் 2019 என இரண்டு முறை தமிழகம் வரலாற்று பிழையை செய்துவிட்டது. அதை சரி செய்யும் வகையில், 2024-ல் நடக்கும் தேர்தலில் பிரதமர் 400-க்கும் மேற்பட்ட எம்.பிக்களுடன் வெற்றி பெற வைக்க வேண்டும்.


 


தமிழகத்தை காப்பாற்ற 2024-ல் பிரதமராக மோடி டெல்லியில் அமர வேண்டும். தமிழகத்தில் ஒரு கொள்ளைக்கார கூட்டம் ஆட்சியில் இருக்கிறது. திமுக ஆட்சியில் 11 அமைச்சர்கள் ஊழல் வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகின்றனர். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. மக்களின் பணத்தை உண்டு கொழுத்தவர்கள் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு போக வேண்டிய நிலை வரும். 31 மாதமாக கொள்ளையடிப்பதை மட்டுமே திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. மோடி என்கிற தனிமனிதருக்கு மட்டுமே திமுக பயப்படுகிறது. மத்திய அரசு மூலம் சேலம் மாவட்டத்தில் 9 ஆண்டுகளில் வீடு இல்லாதவர்களுக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 63,828 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. வீட்டில் பைப்பை திறந்தால் குடிநீர் வர வேண்டும் என்பது கர்மவீரர் காமராஜரின் கனவு. அதற்கான அஸ்திவாரத்தை அவர் போட்டாலும், அடுத்து வந்த திராவிட ஆட்சிகள் அதனை முன்னெடுக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடியின் முயற்சியால் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 970 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுகவின் சாதனை என்பது மத்திய அரசின் திட்டத்தில் 6 ஆயிரம் ரூபாய் கமிஷன் அடிப்பதுதான். 2014-க்கு முன்பு வீடுகளில் கழிவறை கூட அரசு கட்டித்தரவில்லை. பிரதமர் மோடி வந்த பிறகு 9 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 539 பேர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை பயன்படுத்தி உள்ளனர்.


 


எடப்பாடி என்றால் விவசாயம்தான். கரும்பு, நெல் சாகுபடி அதிகம் நடக்கிறது. விவசாயிகளுக்கு கெளரவ நிதி திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 151 பேருக்கு வருடம் தோறும் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வங்கிக் கணக்கிற்கு ரூ.30 ஆயிரம் வந்துள்ளது. மத்திய அரசு திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தை முழுமையாக பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து 9 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு வருமான வரி உள்ளிட்ட வரிகள் வாயிலாக 6 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. 9 வருடங்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் வாயிலாக திரும்பக் கொடுத்த பணம் 6 லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாய். மக்கள் கஷ்டப்பட்டு வரியாக செலுத்திய பணம் லஞ்ச லாவண்யம் இல்லாமல் மக்களுக்கே திட்டங்களாக திரும்ப வந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் உள்ள ஒருவர் மீது கூட ஊழல் புகார் இல்லை. ஊழல் இல்லாத ஆட்சி கொடுக்க முடியும் என்பதை பாரதிய ஜனதாக் கட்சி நிரூபித்துள்ளது. நம்முடைய தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் பிரதமர் மோடி அளவிற்கு யாராவது உயர்த்தி பிடித்துள்ளார்களா. எத்தனையோ பிரதமர்கள் வந்தாலும் உலகத்தின் தொன்மையான மொழி தாய்மொழி தமிழ்மொழி என்பதை உயர்வாக பேசியது பிரதமர் மோடி மட்டும்தான். தமிழ் மொழிக்கு இந்திய அளவில் இந்த அளவிற்கு அங்கீகாரம் இதுவரை யாரும் கொடுத்தது இல்லை. இந்தியாவில் குடும்ப ஆட்சியை உடைக்க வேண்டும் என பிரதமர் மோடி மட்டுமே விரும்புகிறார். தமிழகத்தில் உழைக்காமல் கோபாலபுரம் குடும்பம் மட்டும்தான் சாப்பிடுகிறது. திமுகவினரை கொத்தடிமை போல பயன்படுத்தி ஒரே குடும்பத்தினர் பயன் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே தமிழகம் வளரும். தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தந்தை-மகன்கள் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். 3-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்தியா முழுவதும் குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும். குடும்ப ஆட்சி இருந்தால், சாமான்ய மனிதர்கள் குடும்பம் முன்னேற 7 தலைமுறைகள் தாண்டித்தான் முடியும். ஏழைத் தாயின் மகன் என்பதால்தான் ஏழைகள் முன்னேற பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். சாதி அரசியல்தான் தமிழகத்தில் கடந்த 20 வருடங்களாக உள்ளது. ஏழை ஜாதி, பெண்கள் ஜாதி, விவசாயிகள் ஜாதி, இளைஞர்கள் ஜாதி என்கிற 4 ஜாதிகளை மட்டுமே பிரதமர் நம்புகிறார். ஏழை என்ற சொல் இல்லாமல் செய்ய தேவையான திட்டங்களை பாரதிய ஜனதாக் கட்சி தொடர்ந்து கொடுத்து வருகிறது. தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கப்பட வேண்டும். உடலுக்கு தீங்கு ஏற்படாத கள் அனுமதிக்கப்பட வேண்டும். டாஸ்மாக் சாராயத்தை குடிக்கக்கூடாது. கள்ளுக்கடை திறப்பது தொடர்பாக ஆளுநரிடம் வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளோம். கள்ளுக்கடைகளை திறந்தால் அரசுக்கு ஒரு லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். திமுகவினருக்காக மட்டுமே டாஸ்மாக் நடந்து வருகிறது. குடிகார சமூகமாக தமிழர்களை திமுக மாற்றி விட்டது" என்று விமர்சித்தார்.