சேலம் மாவட்டம் எடப்பாடியில் நீட்தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் புனிதா வீட்டிற்கு நேரடியாக சென்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட நீட் மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு, அதிமுக சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, மாணவி புனிதாவின் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவிப்பு விடுத்திருந்தார். ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு நீட்தேர்வு ரத்து செய்வதற்கு ரகசியம் எங்களிடம் உள்ளது என்று உதயநிதி கூறினார். அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் ஒரு கோடி பேரிடம் கையொப்பம் பெற்றதாக அறிவித்தார்கள். திமுக இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நீட்தேர்வு ரத்து செய்வதற்கு வாங்கிய கையெழுத்து படிவத்தை மாநாட்டு திடலில் சிதறி கிடந்தது. அதன் பிறகு அந்த கோரிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆட்சிக்கு வந்து 41 மாதம் ஆகியும் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் நடவடிக்கை என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினர்.
திமுக அரசின் போலி நாடகம், போலி அறிவிப்பு இவையெல்லாம் கண்டிக்கத்தக்கது. நீட்தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், திமுகவும் தான். 2010ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது இடம்பெற்று இருந்தது. 2010 டிசம்பர் மாதம் தான் இது அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று இரட்டை வேடம் போடுகின்றனர். நீட்தேர்வை கொண்டு வந்ததும் திமுக தான். அது ரத்து செய்யும் நாடகத்தை அரங்கேற்றுவதும் திமுக தான். இதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திமுகவின் வெற்று அறிவிப்பின் மூலமாக தான் விலை மதிக்க முடியாத உயிரை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். 41 மாத காலம் ஆகியும், நீட்தேர்வு ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தார்கள். அதிமுக ஆட்சியில் நீட்ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம். அதையே தான் திமுகவும் செய்துள்ளது. திமுக, காங்கிரஸ் ஆட்சியின் போது நீட் கொண்டு வந்த நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் திமுகவை சேர்ந்த காந்திசெல்வன். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் ரத்து செய்ய முடியும். அதற்கு என்ன செய்தார்கள்.
40 தொகுதியும் வெற்றி பெற்றுள்ள திமுக கூட்டணி நாடாளுமன்றத்தில் இதற்கு என்ன செய்தார்கள். தகுந்த அழுத்தம் கொடுத்து இருந்தால் இதற்கான தீர்வு ஏற்பட்டிருக்கும். காவிரி பிரச்சனையின் போது உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம். மாணவர்கள் மருத்துவர் ஆக வேண்டும் என்பது அவர்களின் நியாயமான கனவு, போதுமான மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது மனவேதனை அடையக் கூடாது. இதுபோன்று துயரமான செயலில் ஈடுபட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நீட்தேர்வு ரத்து செய்ய அதிமுக ஆட்சியின்போது நான் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். திமுக முதலமைச்சர் எத்தனை முறை பிரதமரை சந்தித்தார். எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு அழைத்தார். அப்போதெல்லாம் ஏன் அவர் அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். கிராமங்களில் இருந்து சென்று படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நீட்தேர்வு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். ஏழை மாணவர்கள் தான் அரசு பள்ளியில் படிக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்காக தான் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு ஏற்படுத்தி கொடுத்தோம். இதன் மூலம் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். மாணவர்கள் மதிப்பெண் குறையும்போது மனம் தளராமல் அவர்களின் குடும்பத்தை எண்ணி தங்கள் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.