சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர்த்து ரெப்ரல் சென்டராகவும் இருந்து வருவதால் அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஏராளமானோர் மேல் சிகிச்சைக்கு இங்கு வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பழைய புறநோயாளிகள் பிரிவில் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதியம் 12 மணி வரை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்திலும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை வாங்குவதற்காக மருந்தகம் சென்றனர். அப்போது மருந்தகத்திலிருந்த மருந்தாளுனர் மதுபோதையில் நோயாளி கொடுத்த மருத்துவ சீட்டை கீழே போட்டு விட்டு அதற்கு பதிலாக மாற்றுச்சீட்டை பார்த்து மருந்து கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மருந்தக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சேலம் அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மருந்தாளுநர் மாதேசை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
இது குறித்த நோயாளியின் உறவினர்கள் கூறுகையில், தனது உறவினர் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக மருந்து வாங்க வந்தபோது மருந்தகத்தில் இருந்த ஊழியர் மதுபோதையில் மாத்திரைகளை மாற்றி எடுத்துக் கொடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. அவரை மருத்துவ பரிசோதனை செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டும். மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு உரிய பாதுகாப்பான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.