இதய நோய் சிகிச்சையில் சேலம் அரசு மருத்துவமனை கடந்த இரண்டு மாதங்களாக முதலிடத்தில் உள்ளது என மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்தார். தமிழக அரசு வழங்கியுள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வாயிலாக இதய நோயாளிகளின் இறப்பு கடந்த இரண்டு மாதமாக பூஜ்ஜியம் என்ற நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.



சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள இதய நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு அதிநவீன உபகரணங்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.


குறிப்பாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு மாதந்தோறும் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக வருகின்றனர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதய நோய் தொடர்பாக அவசர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு இதய நோய் சிகிச்சை குழுவினர் உடனடியாக அதிநவீன சிகிச்சை அளிப்பதாகவும் இதன் மூலம் கடந்த இரண்டு மாதமாக இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.


மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, சிகிச்சை மட்டுமன்றி சிகிச்சை முடிந்து செல்பவர்களை முதலமைச்சரின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் கண்காணித்து உரிய மருந்து மாத்திரைகளை வழங்கி வருவதாகவும் கூறினார். இதய நோய் சிகிச்சையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அளவில் முதல் இடத்தில் உள்ளதாகவும் இங்குள்ள மருத்துவ வசதிகளை ஏழை எளிய மக்கள் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். 



மேலும், ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் 30 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் ஒமிக்ரானுக்கு யாரும் பாதிக்கப்படவில்லை. ஒமிக்ரான் இல்லை என்பதால் மக்கள் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அரசு அறிவுறுத்தலின்படி மக்கள் அனைவரும் உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாள் ஒமிக்ரானில் இருந்து நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கூறினார்.