சேலம் மாவட்டம் திருமலைகிரியை சேர்ந்தவர் விக்னேஷ், இவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கல்லூரி நுழைவாயிலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த சீனியர் 4 மாணவர்கள் திடீரென விக்னேஷை சைக்கிள் செயினை கொண்டு தாக்கினர். இதனால் படுகாயமடைந்த விக்னேஷ் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ரேக்கிங் தொடர்பாக சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர் விக்னேஷை தாக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக எம்ஏ பொருளியல் மாணவர்கள் அஜித், கௌதமன், தீனா மற்றும் விக்னேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் தலைமையில் ஆட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாம் ஆண்டு மாணவர் விக்னேஷ் தாக்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட அஜித், கௌதமன், தீனா மற்றும் விக்னேஷ் ஆகியோரை டிஸ்மிஸ் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பேக்கிங் செய்வதை பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.