பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்னிட்டு சேலத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வெல்லம் தயாரிக்கும் அணைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். 



அப்பொழுது ஏழுமலை, தங்கதுரை, கிருஷ்ணன், குணசேகரன் ஆகிய நான்கு பேர் நடத்தி வந்த கரும்பாலையில் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 4.31 லட்சம் மதிப்பிலான 12,700 கிலோ சர்க்கரை மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் ஒரு ஆலையில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட 500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 30 ஆயிரம் ரூபாய் ஆகும். இவையிலிருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக சர்க்கரை, ஹைட்ரோஸ், ப்ளீச்சிங் பவுடர், சூப்பர்பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு பாதுகாப்பு சட்டம் 2006 ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இதேபோல் கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டில் வெள்ளை சர்க்கரை 22,325 கிலோ, ஜாங்கிரி 61,086 கிலோ, மைதா 190 கிலோ, செயற்கை நிறமூட்டிகள் 400 கிலோ, ஹைட்ரோஸ் 5 கிலோ மற்றும் சோடியம் பீ கார்பனேட் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 2020 - 2021 ஆம் ஆண்டில் வெள்ளை சர்க்கரை 600 கிலோ, ஜாங்கிரி 2,100 கிலோ, சோடியம் பீ கார்பனேட் 25 கிலோ மற்றும் சோடா 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு பின்பு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.