சேலம் மாவட்டத்தில் விரைவில் ராணுவ தளவாட மையம், சர்வதேச விமான நிலையம், சிப்கோ, சிப்காட் என 53 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் சேலம் மாவட்ட தொழிலாளர்கள் கூட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹான்ஸ் ராஜ் வர்மா தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் இராணுவ தளவாட மையம் அமைப்பதற்கான திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 330 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



கூட்டத்தில் பேசிய சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சேலத்தில் இராணுவ தளவாட மையம் அமைக்க 1050 ஏக்கர் இடம் தேவைப்படுகிறது. இதனை சேலம் இரும்பாலையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும், சேலம் விமான நிலையத்தை மேம்படுத்த மேலும் 150 ஏக்கர் நிலம் தேவை படுகிறது. அருகில் உள்ள விவசாயிகள் இடம் தர மறுப்பதால் நடைமுறை சிக்கல் நீடிக்கிறது. இதனால் மாற்று இடம் தேட வேண்டிய சூழல் உள்ளது. இரும்பாலை அருகே 500 ஏக்கரில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் அமைக்க ஆய்வு செய்து வருகிறோம். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசி மத்திய அமைச்சரிடம் அழுத்தம் கொடுக்கப் போவதாக கூறினார்.


கூட்டத்தில் பேசிய சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், 'ஒரு நாட்டிற்கான அத்தனை தகுதிகளும், வளமும் சேலம் மாவட்டத்திற்கு உள்ளது'. விமான நிலையம் விரிவாக்கத்திற்கு 330 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. யாரும் பாதிக்கப்படாத வகையில் விரைவில் இப்பணிகள் முடிவடையும். இரும்பாலையில் பாதுகாப்பு தளவாடம் அமைப்பதற்காக ஒப்புதல் கடிதம் கோரி உள்ளோம். அது வந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சேலத்தில் டெக்ஸ்டைல் பார்க், சிட்கோ மற்றும் சிப்காட் அமைக்கவும் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், சங்ககிரி சாலையில் டாடா நிறுவனத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதன் பணியும் நடைபெற்று வருகிறது.


சிலிண்டர் விபத்து ஏற்படாதவாறு பைப் லைன் காஸ் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. சரபங்கா நீரேற்று திட்ட பணிகளும் நடந்து வருகிறது. சேலத்திற்கு கேந்திரி வித்யாலயா பள்ளி கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற 53 திட்டங்கள் நடைமுறைப்படுத்தி இடம் கையகப் படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வவருகிறது என்றார். சேலம் மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை பயனுள்ளதாக மாற்ற நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.