மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்க மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தையும், மாற்றுத் திறனாளி அலுவலகத்தையும் கண்டித்து 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒன்றை ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் வசிக்கும் 39 மாற்று திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை மிகவும் பின்தங்கியுள்ள, வீடு இல்லாமல் ஐந்து தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் வீட்டுமனைகளை வழங்கிட வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன உதவிகளையும் வழங்கிட வேண்டும் மற்றும் இது நாள் வரை கடந்த 15 மாதம் எங்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தற்போது எங்களை தர்ணா செய்யும் சூழலுக்கு கொண்டு வந்து விட்டுவிட்டனர். மாற்றுத்திறனாளி அலுவலகத்திலும் மாவட்ட நிர்வாகத்தினரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். திடீரென மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் காவல்துறையினர், மாற்றுத்திறனாளி துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோன்று, சேலம் மாவட்டம் கெங்கவல்லி நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்ற மூதாட்டிக்கு ஒன்பது ஏக்கர் நிலத்தை அரசு கடந்த 1955 ஆம் ஆண்டு வழங்கியது. இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் தாசில்தார் வேறு ஒருவரிடம் ஆதாயத்தைப் பெற்றுக்கொண்டு மாற்றி கொடுத்துவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி லட்சுமியம்மாளின் பேரன் பாலமுருகன் என்பவர் தாம்பூல தட்டில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவைகளுடன் மனுவை வைத்து எடுத்து வந்து வித்தியாசமான முறையில் மனுவளித்தார். இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் மனுவளித்து இந்த நிலம் தங்களுக்கு சொந்தமான இடம் என்று பதில் அளித்துள்ளனர். ஆனால் நீதிமன்ற உத்தரவை மாற்றிவிட்டதால் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வித்தியாசமான முறையில் பாதிக்கப்பட்ட நபர் மனு அளித்தது வியப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ராமமூர்த்தி தனியாக வசித்து வருகிறார்.இதனிடையே கடந்த ஐந்தாம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது அருகில் இருந்தவர்கள் தனது மகள் ராஜேஸ்வரி என்பவர் வீட்டை திறந்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சேலம் மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல இடங்களில் மனுஅளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார். இதனிடையே சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த ராமமூர்த்தி மாவட்ட ஆட்சியர் காரின் முன்பாக திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக ஆம்புலன்ஸ் இருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ராமமூர்த்தியை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ராமமூர்த்தியிடம் விசாரித்தபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தான் விஷம் அருந்திவிட்டதாகவும் காவல்துறையினர் தனது வழக்கை எடுத்து விசாரிக்க மறுப்பதால் இந்த தற்கொலை முயற்சிக்கு மேற்கொண்டதாக தெரிவித்தார். இது சம்பவங்களால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.