சேலம் பாராளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் மாநகர், சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சேலம் பாராளுமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி வாரியாக பெற்ற வாக்குகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடான ஒத்துழைப்பு, வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.



ஆலோசனைக்குப் பின்னர் பாரதிய ஜனதாக் கட்சி மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச் சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகரைச் சுற்றியுள்ள வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் 22 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது. 15 பாராளுமன்றத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 2 ஆம் இடத்திலும், 80க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளோம். இதன்மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதிமுக கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது எந்தெந்த பகுதியில் உங்களுக்கு செல்வாக்கு உள்ளது என கேட்பார்கள். இப்போது மக்களே அதற்கு தெளிவான பதிலை சொல்லியுள்ளனர்.



கள்ளச்சாராய விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சமூக பொறுப்பின்றி பேசுவது சரியல்ல. டாஸ்மாக் கடைகளில் அதிக விலை கொடுத்து மது வாங்க முடியாதவர்கள் கள்ளச்சாராயத்தை தேடிச் சென்று உயிரிழக்க நேரிடுகிறது. இதனை ஒழிக்க, தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதிவழங்க வேண்டும். ஆனால் கள்ளுக்கு அனுமதி அளித்தால் தங்களுடைய அமைச்சர்களின் மதுபான ஆலை வருமானம் குறைந்து விடும் திமுக அரசு பயப்படுகிறது. திருத்தப்பட்ட மதுவிலக்கு தீர்மானத்தில் கள்ளச்சாராயம் விற்றால் ரூ.10 லட்சம் அபராதம் என அறிவித்து இருப்பது நாடகம் போலவே உள்ளது. கள்ளக்குறிச்சி நிகழ்விற்கு பின்னரும், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை நடந்து கொண்டுதான் உள்ளது. கிராமப்புற பொருளாதாரம் உயரும் வகையில், கள்ளுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.


சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மட்டும் அபராதம் கொடுப்பது போதுமானதல்ல. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்து விட்டு, தொழிலாளர்களுக்கு குறைவாக கொடுக்க கூடாது. பட்டாசு தொழிலாளர்களுக்கும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படியாவது பணபலத்தை பயன்படுத்தி ஜெயிப்பதற்கு திமுக தயாராகி வருகிறது. திமுகவினரின் தேர்தல் விதிமீறல்களை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். விக்கிரவாண்டியில் நியாயமான தீர்ப்பை வாக்காளர்கள் வழங்குவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு பேசினார். 


நடிகர் விஜய், தமிழ்நாட்டில் நல்ல அரசியல்வாதிகள் தேவை என்று பேசியது குறித்த கேள்விக்கு, நடிகர் விஜய் இப்போதுதான் கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு இன்னும் நிறைய நல்ல அரசியல்வாதிகள் வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறியிருப்பார் என கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.