சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பொதுமக்கள், சுடுகாடு மற்றும் பஞ்சாயத்து கிணறுகளை காணவில்லை அவற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறி பாடைகட்டி மேளதாளத்துடன் மனு வழங்க வந்ததால் பரபரப்பு நிலவியது. குடியரசு தின விழாவை ஒட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள 365 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம், அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில், ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மல்ல மூப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது மல்ல மூப்பம்பட்டி ஊராட்சியில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த சுடுகாடு மற்றும் பஞ்சாயத்து கிணறுகளை காணவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் பாடை கட்டி மேளதாளத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராம சபை கூட்டத்தில் மனு வழங்க வந்தனர்.



இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மல்ல மூப்பம்பட்டி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பஞ்சாயத்தில் உள்ள மல்ல மூப்பம்பட்டி, அய்யனாரப்பன் கோயில், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று சுடுகாடுகளும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அலட்சியத்தால் குப்பைகளை கொட்டி மூடப்பட்டும் சாக்கடை நீர் ஓடும் இடமாகவும் மாற்றப்பட்டு காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. மேலும் சுடு காட்டில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் புற்றுநோய் , ஆஸ்மா உள்ளிட்ட நோய் தொற்றுக்கு ஆளாகி பலர் உயிரிழந்தும் உள்ளனர்.



இந்த உயிர் இழப்பு சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே போகிறது. பிளாஸ்டிக், அசுத்தமான கழிவுகள் என அனைத்தையும் சுடுகாடுகளில் கொட்டப்படுவதால் இறந்தவர்களின் உடலை கூட அங்கு அடக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். எனவே அந்த சுடுகாடுகளை மீட்டு கொடுக்க சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல எங்களது முன்னோர்கள் தோண்டி வைத்த கிணறுகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். இந்த இரண்டு குறைகளையும் நிவர்த்தி செய்து ஊராட்சி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பைப்புகள் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தினை மாநில அரசு சரிவர செயல்படுத்துவதில்லை. இது மட்டும் இன்றி ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளில் பல்வேறு முறை தேடுதல் நடைபெற்றுள்ளதாகவும், அதனை உடனடியாக சரி செய்து மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.