சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி ரோடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் பள்ளப்பட்டி அருகே உள்ள கோரிக்காடு பகுதியில் பருப்பு மில்லுக்கு தேவையான மெஷினை தயார் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இந்த நிறுவனத்தில் பாஸ்கர், சாரதி என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல் இன்று காலை பட்டறையைத் திறந்து பணிசெய்து கொண்டிருக்கும்போது இரண்டு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து கொண்டு வந்த மர்மகும்பல் சிவகுமாரை இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த பட்டறை ஊழியர்கள் பாஸ்கர், சாரதி மீதும் தாக்குதல் நடத்தி மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றனர்.
பலத்த காயமடைந்த சிவகுமார், பாஸ்கர், சாரதி ஆகிய மூன்று பேரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகமூடி அணிந்து கொண்டு மூவரையும் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த துணை ஆணையாளர் மாடசாமி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சிவக்குமாருக்கு சொந்தமான வீடு திருமலைகிரி பகுதியில் உள்ளது. அந்த வீட்டில் ஏழுமலை என்பவரை போக்கியத்திற்கு குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் பணம் சம்பந்தமாக கொடுக்கல் வாங்கலில் ஏழுமலைக்கும் சிவகுமாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தாக்குதல் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்திய மர்மகும்பல் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.