சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் சேலம் புத்தகத் திருவிழா அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் 210 அரங்குகள் இடம்பெற்றுள்ளது. சுமார் 100 பதிப்பகங்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சி நவம்பர் மாதம் 20 ஆம் தேதி துவங்கி வரும் கடந்த 30 ஆம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சியினை வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி நாளை சேலம் புத்தக கண்காட்சி முடிவடைய உள்ளது.



சேலம் புத்தக கண்காட்சிக்கு நாள்தோறும் மக்கள் தரும் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு ஏற்றார் போல சேலம் மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவர்கள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் தினம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றிற்கு 20,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சேலம் புத்தகக் கண்காட்சிக்கு வந்து செல்கின்றனர். கடந்த 11 நாட்களில் மூன்று லட்சம் பேர் இதுவரை வந்துள்ளனர்.


இவர்களின் மூலம் இரண்டு கோடி 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இதில் சேலம் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் மட்டும் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் புத்தக ஆர்வலர்கள் சேலத்திற்கு படையெடுத்து வருகின்றனர். சேலம் புத்தக கண்காட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் புத்தகங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழர்களின் வரலாற்றை குறிக்கும் பொன்னியின் செல்வன், வேள்பாரி, ராமாயணம், மகாபாரதம் போன்ற பல்வேறு புத்தகங்களுக்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சேலம் புத்தக கண்காட்சியில் கடந்த 11 நாட்களில் கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் அதிகம் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த புத்தக கண்காட்சியில் தமிழர்களின் வரலாறு, இலக்கியம் மற்றும் இலக்கணம் போன்ற புத்தகங்கள், வரலாற்று சிறப்புமிக்க நூல்கள், சிறுகதை புத்தகங்கள், சிறுவர்கள் படிக்கக்கூடிய கார்ட்டூன் புத்தகங்கள், ஆங்கில கதை புத்தகங்கள், யோகா மற்றும் மருத்துவ புத்தகங்கள் அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். 


சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தினசரி கலை பண்பாடு கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும், தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தினம்தோறும் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகளை புத்தக கண்காட்சியை பார்வையிட ஏற்பாடுகள் செய்தனர். 


மேலும், சேலம் புத்தக கண்காட்சிக்கு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கேயே அமர்ந்து புத்தகங்கள் வாசித்து பயன்பெறும் வகையில் வாசிப்பு அரங்குகளும் ஒலி, ஒளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியை முன்னிட்டு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ள இந்த பகுதி சைலன்ட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நான்கு ரோடு சந்திப்பு முதல் ஐந்து ரோடு சந்திப்பு வரை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒலி எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட உத்தரவை மீறி வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட இப் பகுதியில் ஒளியை எழுப்பினால் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.