சேலம் மாவட்டத்தில் இரவில் வீசும் குளிர்காற்றும், காலையில் பொழியும் பனிப்பொழிவால் பூக்கள் விளைச்சல் மட்டுமின்றி அறுவடையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை சேலம் வ.உ.சி மார்க்கெட்டுக்கு தினமும் இரண்டு டன் மல்லிகை பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது ஒரு டன் மட்டும் கொண்டுவரப்படுகிறது. அதேநேரம் தொடர் முகூர்த்தம் மற்றும் சபரிமலை சீசன், நெருங்கும் கார்த்திகை தீபத் திருவிழாவால் பூக்கள் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. வரத்து சரிந்த நிலையில் தேவை அதிகரிப்பால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பூக்களில் அளவு குறைந்துள்ளது. 



கடந்த நவம்பர் மாதம் மல்லிகை பூ கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில், நேற்று 2000 ரூபாய்க்கு விலை உயர்ந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 2,400 க்கு கிலோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 200 ரூபாய்க்கு விற்ற முல்லை 1,600 ரூபாய்க்கும், 240 க்கு விற்ற ஜாதிமல்லி 800 ரூபாய்க்கும், நூறு ரூபாய்க்கு விற்ற காக்கட்டான் 800 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்ற கலர்மாலை காக்கட்டான் 800 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. அத்துடன் 70 ரூபாய்க்கு விற்ற அரளி 260 ரூபாய், நூறு ரூபாய்க்கு விற்ற வெள்ளை மற்றும் மஞ்சள் செவ்வரளி தலா 260 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்ற நந்தியாவட்டம் 400 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



நேற்று, மல்லி பூ ஒரு கிலோ ரூ.2000 க்கு, முல்லை ஒரு கிலோ ரூ.1200க்கும், ஜாதிமல்லி ஒரு கிலோ ரூ.600க்கும், காக்கட்டான் ஒரு கிலோ ரூ.700க்கும், கலர் காக்கட்டான் ஒரு கிலோ ரூ.700க்கும், மலைக்காக்கட்டான் ஒரு கிலோ ரூ.600க்கும், அரளி ஒரு கிலோ ரூ.180க்கும், வெள்ளை அரளி ஒரு கிலோ ரூ.180க்கும், மஞ்சள் அரளி ஒரு கிலோ ரூ.180க்கும், செவ்வரளி ஒரு கிலோ ரூ.200க்கும், நந்தி வட்டம் ஒரு கிலோ ரூ.200க்கும், சி.நந்தியாவட்டம் ஒரு கிலோ ரூ.200க்கும், சம்மங்கி ஒரு கிலோ ரூ.50க்கும், சாதா சம்மங்கி ஒரு கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்தது குறிப்பிடப்பட்டது. இரண்டு வாரங்கள் தொடர்ந்து முகூர்த்தம், கார்த்திகை தீபம் மற்றும் சபரிமலை ஐயப்பன் சீசன் இருப்பதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது.