நடமாடும் மருத்துவமனை ஒப்பந்த ஓட்டுநர்களிடம் ரூ. 4 கோடி அளவில் பணம் பெற்று நிரந்தர பணியில் அமர்த்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 389 நடமாடும் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டு திரவிட முன்னேற்ற கழகம் ஆட்சி காலத்தில் இதற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஓட்டுநர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க சேலத்தை சேர்ந்த நடமாடும் மருத்துவ மனை வாகனம் ஓட்டுனர்களான பார்த்தசாரதி மற்றும் வெற்றிவேல் ஆகியோர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிவரும் ஒப்பந்த ஓட்டுனர்களிடம் அவரவர் பதவி காலங்களுக்கு ஏற்ப, தவணை முறையில் ரூபாய் ஒரு லட்சம் முதல் 3 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான அம்மாசி என்பவரின் பெயரை பயன்படுத்தி, ஒவ்வொருவரிடமும் பணம் பெற்றதாக கூறும் இவர்கள் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூறி பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், இது தொடர்பாக எந்தவித அலுவல் நடவடிக்கையும் இல்லாத நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஒப்பந்த நடமாடும் மருத்துவமனை வாகன ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், நிரந்தர பணியாளர்களாக மாற வேண்டும் என்ற ஆசையும் தான் இப்படி குறுக்கு வழியில் ஈடுபட்டனர் என்றும் கூறினார். மோசடி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஓட்டுநராக பணிபுரியும் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இவர்கள் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும் என மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் 150 க்கும் மேற்பட்டோர் அரசு ஒப்பந்த ஓட்டுனர்கள், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.