சேலத்தில் இன்று பிற்பகல் பலத்த காற்றுடன் பெய்த கனமழை சுமார் இரண்டு மணிநேரம் வரை நீடித்ததால் தாழ்வான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென திரண்ட கருமேகக் கூட்டத்தால்  சேலம் மாநகர பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் இரண்டு மணிநேரம் வரை நீடித்த கனமழை காரணமாக தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, நாராயண நகர் , சூரமங்கலம், சிவதாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. 



பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது, இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக சேலத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது



சேலத்தின் மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏற்காடு, ஜருகுமலை, நாம மலை , பெருமாள் மலை போன்ற பல்வேறு மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மலைக் கிராமமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சேலத்தில் மையப்பகுதியான பொன்னம்மாபேட்டையில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கல் அணையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை உடையும் அபாயம் உள்ளதால் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்காட்டில் ஆங்காங்கே புதிதாக சிறிய அருவிகள் உருவாகியுள்ளதால் நீண்ட நாட்களுக்குப் பிறகு செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். இருப்பினும், இரவு நேரங்களில் ஏற்காடு மலை பாதையில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருவதால் சேலம் திருமணிமுத்தாறு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் ஓடுகிறது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் சாலை உடைந்து காணப்படுவதற்கு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சேலம் மாநகராட்சி சார்பில் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை பல்வேறு நவீன கருவிகளைக் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் வெளியேற்றி வருகிறது.



இரண்டு மணிநேரம் தொடர்மழையில் சேலம் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லையை ஒட்டிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறிய நிலையில் இனிவரும் மழைக்காலத்தில் சமாளிப்பது எப்படி என்ற அச்சத்தில் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.