தருமபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிர்களை விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். தமிழகத்திலேயே சிறு தானிய உற்பத்தியில் சிறப்பு வாய்ந்த மாவட்டம் என்ற பெயர் தருமபுரி மாவட்டத்திற்கு உண்டு. தருமபுரி மாவட்டத்தில் சோளம், ராகி, தினை, குதிரைவாலி, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட சிறு தானிய வகைகளை விவசாயிகள் அதிகப்படியாக சாகுபடி செய்து வருகின்றனர்.

 


 

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி  அரூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில், விவசாயிகள் கம்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்த இரண்டு மாத காலமாக தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், தற்போது கம்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட, இந்தாண்டு மகசூல் அதிகமாகவும் கிடைத்துள்ளது.

 


 

இந்நிலையில் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களில், மகசூல் வைத்து கதிர் அறுவடைக்கு வரும் நேரத்தில் பறவைகள் வந்து கொறித்தது போக, மீதமுள்ளவை தான் விவசாயிகளுக்கு கிடைக்கும். இதனால் கம்பு விவசாயிகளுக்கு   மிகவும் பேரிழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இதனால் இறைக்காக பறவைகள் வந்து செல்வதை தடுக்க, பறவைகளை விரட்டுவதற்காக விவசாயிகள், சோளம், கம்பு சாகுபடி செய்துள்ள வயல்களை சுற்றிலும், காற்றடித்தால் அசைந்து சத்தம் போடும் வகையில், இரண்டு பழைய சில்வர் தட்டுகளை வைப்பது, காலி வாட்டர் பாட்டில்களை வரிசையாக கட்டுதல், ஒலி நாடாக்களை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் அரூர் பகுதியில் நல்ல மகசூலுடன் அறுவடைக்கு தயாராக உள்ள கம்பங்கொல்லையில் சிட்டுக் குருவிகள், மைனா, பச்சைக்கிளி உள்ளிட்ட பறவைகள் தானியங்களை கொறித்து செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு மகசூல் குறைவதால், அறுவடைக்கு தயாராக உள்ள கம்பங்கொல்லையில் விவசாயிகள் சத்தமிட்டு, இறைக்காக வரும் பறவைகளை விரட்டி வருகின்றனர்.

 


 

இந்நிலையில் கொரோனா விடுமுறையால், தங்களது பெற்றவர்களுக்கு உறுதுணையாக, காலை, மாலை இரு வேலைகளில் அதிகப்படியான பறவைகள் வருவதால், பள்ளி மாணவர்கள் கம்பங்கொல்லையில் உயரமாக குடில் அமைத்து, சிறு சிறு பிளாஸ்டிக் கேன்களை வைத்து தட்டியும், சத்தமிட்டும் பறவைகளை விரட்டி வருகின்றனர். தொடர்ந்து வெயில் அடிக்கும் போது பறவைகள் வருகை குறைந்து விடும். அந்த நேரங்களில், இணைய தளம் மூலம் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை, எழுதுதல், படித்தல் போன்ற படிப்பு தொடர்பான வேலைகளையும் செய்து வருகின்றனர். இந்த பணி மாணவர்களுக்கு பொதுபோக்காகவும், பெற்றோருக்கு உதவியாகவும்  இருப்பதாக, மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதேப்போல் தருமபுரி மாவட்டம் முழுவதுமுள்ள விவசாயிகளும் கம்பு, சோளக் கதிர்களை கொறிக்க வரும் பறவைகளை சத்தம் போட்டு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.