தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 7000 ஏக்கரில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு  குண்டு மல்லி, ஊசிமல்லி, பட்டன் ரோஸ், கனகாம்பரம், முல்லை, சாமந்தி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யும் பூக்கள் அனைத்தும் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் இங்கு விளைவிக்கக் கூடிய பூக்கள் ஓசூர், சென்னை, பெங்களூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி மலர்ச்சந்தைக்கு தினசரி 10 டன் முதல் 20 டன் வரை பூக்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

 


 

இந்நிலையில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே மலர் சந்தை சரியாக இயங்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பொதுமுடக்கம் முடிந்து பூ மார்க்கெட்டுகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. ஆனாலும் பூக்கள் விற்பனை என்பது மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் ஆடி மாதம் முடிந்து நாளை முதல் சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான சுப நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை மற்றும் கர்நாடக மாநிலத்தில் வரலட்சுமி பண்டிகை எதிரொலியால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

 


 

 

இதனால் தருமபுரி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து, கிலோ குண்டு மல்லி ரூ.160-லிருந்து 800-க்கும், ஊசி மல்லி ரூ.180லிருந்து 600-க்கும், கனகாம்பரம் ரூ.360லிருந்து 800 என உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் நந்தவட்டம் பூ ரூ.600,  சாமந்தி ரூ.120, அரளி ரூ.240, பட்டன் ரோஸ் ரூ.200, செண்டு மல்லி ரூ.60, ஒரு கட்டு ரோஜா பூ ரூ.200, தாழம்பூ ரூ.200, சம்பங்கி ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து கடந்த வாரம் பூக்களை கேட்பதற்கு ஆளில்லாமல் விலை குறைவாக விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் மற்றும் அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் சில விவசாயிகள் பூக்களை பறிக்காமல் அப்படியே செடியிலே காய விட்டனர். சில விவசாயிகள் விற்பனைக்காக மார்க்கெட்டிற்கு எடுத்து வந்து, விலை குறைவு என்பதால் கீழே கொட்டிவிட்டு சென்றனர். 

 


 

ஆனால் ஆடி மாதம் முடிந்து இன்று முதல்  சுப முகூர்த்த தினம், ஓணம், வரலட்சுமி பண்டிகை என்பதால் பூக்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளதால், தேவை அதிகரித்து கடந்த வார்ததை விட, பூக்களின் விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பூக்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.