தருமபுரி அடுத்த அன்னசாகரம் குடியிருப்பு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல தினசரி பூஜை முடித்த பின்னர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு அர்சகர் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து இன்று காலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவிலின் உள் பிரகாரத்தில் பொருட்கள் சிதறி கிடந்ததும், உண்டியல் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் அங்கிருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடுத்து சென்றுள்ளதை கண்டு அர்ச்சகர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கோவில் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த கொள்ள சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி நகர காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் நகர காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, கோவிலில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவை காவல் துறையினர் ஆய்வை செய்து பார்த்துள்ளனர். அப்பொழுது கோவில் திருடிய மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமராவின் ஹாட் டிஸ்க்கை, உடைத்து தண்ணீரில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவுகள் உள்ளிட்ட தடயங்களை காவல் துறையினர் சேகரித்தனர். தொடர்ந்து கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் எவ்வளவு என்பது குறித்து இந்து அறநிலைய துறையினருடன், காவல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் சிக்கிவிடாமல் இருக்க அங்கிருந்த ஹார்ட் டிஸ்கை தண்ணீரில் வீசியுள்ளனர். இதனால் கேமரா பதிவுகளை ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் கேமரா பழுதை நீக்கும் பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பழமை வாய்ந்த கோவில் என்பதால், பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனப்படும் எழுந்துள்ளது. தருமபுரியில் பழமை வாய்ந்த கோவிலில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.