தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலையில் சித்தேரி, பெரேரி புதூர், சூரியனகடை, சூளுக்குறிச்சி, மண்ணூர், தோல்தூக்கி உள்ளிட்ட அறுபத்தி நான்கு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் சாமை, தினை, கேழ்வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஊட்டி, கொடுக்கானல் போன்ற குளுமையான சூழல் இருப்பதால், சில்வர் ஓக் மரங்கள், மிளகு போன்ற பணப் பயிர்களையும் வைக்க தொடங்கியுள்ளனர். இங்கு விளைகின்ற சிறுதானியங்கள் முழுமையும் மலையிலிருந்து, அரூர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆனால் மலை கிராமத்திற்கு சரியான சாலை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாததால், சில வியாபாரிகள் மலை மீது சென்று தானியங்களை குறைந்த விலைக்கு மலைவாழ் மக்களிடம் வாங்கி செல்கின்றனர்.
தற்போது சித்தேரி மலை கிராமம் முழுவதும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சாமை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் சாமை விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்பொழுது சித்தேரி மலை மீதுள்ள மலை கிராமம் முழுவதும் சாமை அறுவடை செய்யும் பணியில், மலை கிராம விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அறுவடை செய்கின்ற சாமையை பிரித்து ராசி எடுப்பதற்கு போதிய இடம் இல்லாமல் விவசாயிகள் வயலில் வெளியிலேயே தார்பாலின் அமைத்து அடித்து வருகின்றனர். எனவே மலை கிராமத்தில் விவசாயிகளுக்கு தானிய களம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
மேலும் மலை கிராமத்தில் விளைகின்ற விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், கூட்டுறவு சங்கம் மூலம் அரசு விலை நிர்ணயித்து, பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். சித்தேரி மலையில் உள்ள மலை கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், மலை விளைகின்ற ராகி, கம்பு, சோளம், திணை, குதிரை வாலி உள்ளிட்ட சிறு தானியங்களை வைத்து, மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வகையில் சிறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேப்போல் சித்தேரி மலை கிராமத்தில், உள்ள விவசாயிகளுக்கு மிளகு, காபி போன்ற பயிர்களை சாகுபடி செய்வது குறித்து வழிகாட்டு முறைகள் மற்றும் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மலை கிராம விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மானிய விலையில் மிளகு, காபி செடிகள் மற்றும் இடு பொருட்களை வழங்க அரசு வேண்டும் என மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.